📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 26, 2026 10:05 PM

சிங்கப்பூரில் போலிப் பணம்: இருவர் மீது குற்றம்

சிங்கப்பூரில் போலிப் பணம்: இருவர் மீது குற்றம்

சிங்கப்பூர்ப் பண நோட்டுகளைப் போலியாக அச்சடித்துத் தயாரித்த சந்தேகத்தில் இருவர் மீது புதன்கிழமை (ஆகஸ்ட் 26) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. அவர்களில் ஒருவர், 33 வயது யாங் ஸெலோங் எனும் ஆடவர். மற்றவர், ஹான் வென்சியான் எனும் 25 வயதுப் பெண்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை மணி 3.50க்கு, மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் ஆடவர் ஒருவர் போலி $100 சிங்கப்பூர்ப் பண நோட்டை மாற்ற முயன்றதாகக் காவல்துறைக்குக் புகார் வந்தது.

அந்த ஆடவர் சூதாட்டக்கூடத்தின் காசாளர் பிரிவில் $150,000 கொடுத்து, அதைத் தனது கணக்கில் போடுமாறு கேட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும், அந்தப் பண நோட்டுகளில் ஒன்றில் ‘கோப்பி’ (நகல்) என்ற வார்த்தை அச்சிடப்பட்டிருந்ததைக் கண்ட காசாளர், காவல்துறைக்குப் புகார் அளித்தார்.

பின்னர், காவல்துறையினர் அந்த ஆடவரை அவருடைய ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, ஒரு பெண் அச்சுப்பொறியுடன் அறையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவரிடமிருந்து 121 போலி $100 சிங்கப்பூர்ப் பண நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும், பேனா மை போத்தல், தாள், தாள் வெட்டி உள்ளிட்ட போலிப் பண நோட்டுத் தயாரிப்புக் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இம்மாதம் 20ஆம் தேதிக்கும் 24ஆம் தேதிக்கும் இடையில் மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டலில் இக்குற்றச்செயல்கள் நடந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.