சிங்கப்பூரில் வேலை மாறுவோர் விகிதம் 5.7 விழுக்காடாகச் சரிவு
சிங்கப்பூரில் வேலை மாறுவோருக்கு அதிகச் சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தபோதிலும், அவ்வாறு செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஆட்சேர்ப்பு மந்தமடைந்துள்ளதும் வேலை நிலைத்தன்மையைப் பலர் நாடுவதும் அதற்கான காரணங்கள் என்று மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) வெளியிட்ட வருடாந்தர ஊழியரணி முதற்கட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
வேலை மாறிய 25 முதல் 64 வயது வரையிலான சிங்கப்பூர்வாசிகளிடையே முழுநேர ஊழியர்களில் மூன்றில் இரு பங்கினர், அதாவது 65.6 விழுக்காட்டினரின் வருமானம் பணவீக்கத்திற்குப் பிறகும் உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோருக்குக் குறைந்தது 5 விழுக்காட்டு ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.
கடந்த ஓராண்டில் வேலை மாறிய குடியிருப்பாளர்களின் விகிதம் 2026ஆம் ஆண்டில் 5.7 விழுக்காடாகக் குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் உச்சத்தைத் தொட்ட இவ்விகிதம் தொடர்ந்து படிப்படியாகச் சரிந்து வருகிறது.
30 வயதிற்குட்பட்ட இளையர்களிடையே, குறிப்பாக 15 முதல் 24 வயதினரிடையேயும் வேலை மாற்றம் பெருமளவு குறைந்துள்ளது. வேலை நிலைத்தன்மையே பணியில் நீடிப்பதற்கான முக்கியக் காரணமாக இளையர்கள் கூறினர்.
அதேவேளையில், 50 வயதும், அதற்கு மேற்பட்ட வயதுமுள்ள மூத்த ஊழியர்கள் வேலை மாறுவது மிகவும் குறைவாக உள்ளது. அவர்களில் ஏறத்தாழப் பாதிப் பேர் குறைந்தது பத்தாண்டுகளாக ஒரே வேலையில் நீடிக்கின்றனர்.
வேலை மாறியோருக்கு நீண்டகால அடிப்படையிலும் உண்மையான வருமான உயர்வு கிடைப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக மனிதவள அமைச்சின் மனிதவள ஆய்வு, புள்ளிவிவரத் துறை இயக்குநர் ஆங் பூன் ஹெங் வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
2025 முதல் 2026 வரை வேலை மாறியோரில் 67 விழுக்காட்டினரும், ஒரே வேலையில் நீடித்தோரில் 61 விழுக்காட்டினரும் வருமான உயர்வு பெற்றனர். 2021 முதல் 2026 வரையிலான ஐந்தாண்டு காலக்கட்டத்தில் இந்த இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் நிகழ்ந்த வேலை மாற்றங்களில் பத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்டவை ஆட்குறைப்பால் இன்றி, ஊழியர்களின் சுய விருப்பத்தாலேயே நிகழ்ந்துள்ளன. சுய விருப்பமின்றி வேலை மாறியோரில் 58 விழுக்காட்டினர் மட்டுமே புதிய வேலையில் கூடுதல் ஊதியம் பெற்றனர்.
வேலை மாறிய பலர் மொத்த விற்பனை வணிகம், நிதி, காப்புறுதிச் சேவைகள் போன்ற அதிக உற்பத்தித்திறன் கொண்ட துறைகளுக்கும், ‘பிஎம்இடி’ எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் பணிகளுக்கும் மாறியுள்ளனர்.
இத்தகைய மாற்றங்களுக்குத் திறன்களும் அனுபவமும் கைகொடுப்பதாக அமைச்சு கூறியது.
பெரும்பாலான துறைகளில் வேலை மாற்றம் குறைந்துள்ள நிலையில், தகவல், தொடர்புத் துறையில் மட்டும் 2025ல் 8.1 விழுக்காடாக இருந்த இவ்விகிதம், 2026ல் 8.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது.