📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business November 27, 2026 02:31 AM

ஏறுமா... இறங்குமா... தங்கம் வாங்க இது சரியான தருணம்தானா?

ஏறுமா... இறங்குமா... தங்கம் வாங்க இது சரியான தருணம்தானா?

ஏறுமா... இறங்குமா... தங்கம் வாங்க இது சரியான தருணம்தானா?

தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. அதேபோல், அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வருவாய் விகிதமும் (Treasury Bond Yields)அதிகரித்துக் காணப்படுகிறது. தொடர்ந்து வரும் FOMC கூட்டங்களிலும் அமெரிக்க வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்ற கருத்தும் வலுத்துவருகிறது.

திருமணம், விசேஷம், சேமிப்பு, முதலீடு எனப் பல காரணங்களுக்காக இந்தியர்களின் வாழ்க்கையில் தங்கத்துக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. ஆனால், சமீபகாலமாகத் தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதும் பெரும் விவாதமாகியிருக்கிறது. ‘தங்கம் விலை இன்னும் ஏறும்... வாங்கிவைத்துக் கொள்ளுங்கள்!' என்கிறார்கள் சிலர். ‘இன்னும்கூட விலை குறையலாம், காத்திருங்கள்' என்கிறார்கள் வேறு சிலர். தங்கத்தைச் சேமிப்பாகவும் முதலீடாகவும் பார்க்கும் மக்களுக்கு இந்தக் கணிப்புகள் ஒருவிதக் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. உண்மை நிலைதான் என்ன... ஒரு சவரன் தங்கம் ₹2 லட்சத்தைத் தொடுமா... அல்லது தற்போதைய விலையிலிருந்து மேலும் இறங்குமா... இப்போதைய விலையில் தங்கம் வாங்குவது புத்திசாலித்தனமான முடிவா? அலசுவோம்.

“தங்கத்தின் விலை படிப்படியாக உயரவே செய்யும்” என்று உறுதியாகச் சொல்கிறார் தங்க நகை விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி.

சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு சிறிதளவு சரியும்போது, பல்வேறு நாடுகள் தங்களிடமுள்ள அமெரிக்க டாலரைத் தங்கமாக மாற்ற முயல்கின்றன. இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணமாக அமைகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், தொழிற்சாலை உற்பத்தி பற்றிய சில முக்கியமான புள்ளிவிவரங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இவற்றின் சாதக, பாதகமான முடிவுகளைப் பொறுத்து, தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும்.

இதனால், தற்போது சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைத் தவிர்த்துவருவதால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயராமல், சிறிது சிறிதாகச் சரிந்துவருவதுடன் நிலையற்ற தன்மையும் நீடித்துவருகிறது.

``ரூ.2 லட்சத்தை எட்டும்..!’’

அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் எடுக்கும் வட்டி விகித முடிவின் தாக்கம் உலகச் சந்தைகளிலும் எதிரொலிக்கும். அந்த வகையில், அடுத்து நடைபெறவிருக்கும் ஃபெடரல் கூட்டத்தில் (FOMC - Federal Open Market Committee.) வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படாது என்ற அனுமானம் நிலவுகிறது. வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை எனில், முதலீடுகள் தங்கத்தின் பக்கம் திரும்பும். மேலும், உலக அளவில் நிலவும் போர்ச்சூழல் மாறி, அமைதியை ஏற்படுத்தும்விதமாகப் பல்வேறு நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதே சூழல் நீடித்தால் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் குறையும். இதனால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்குவார்கள். அமெரிக்கப் பொருளாதாரத்திலும் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இது போன்ற காரணங்களால், வரும் 2027 மார்ச் மாதத்தில் தங்கத்தின் விலை ரூ.1,80,000-ஐ கடந்து, ரூ.2 லட்சம் வரை செல்லும். இந்த விலை உயர்வு படிப்படியாகவே ஏற்படும். தங்கத்தின் விலை உயரும்போது வெள்ளியின் விலையும் உயரும். வெள்ளியின் விலை ஒரு கிலோ ₹4 லட்சம் வரை செல்லும்” என்கிறார் ஜெயந்திலால் சலானி.

``புதிய உச்சத்துக்குச் செல்லாது!’’

கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரின் கருத்து வேறு மாதிரி இருக்கிறது. “சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கம், 2,500, 3,000 டாலரிலிருந்து கிட்டத்தட்ட 5,400 டாலர் வரை சென்ற பிறகு, மீண்டும் புதிய உச்சங்களைத் தொட மிக நீண்டகாலம் எடுத்துக்கொள்ளும்.

இத்தகைய சூழ்நிலையில், பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று டாலரில் முதலீடு செய்யவே அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும், வளைகுடா நாடுகள் தங்களது நிதி நிலைமையைச் சீராக்க, தங்கள் இருப்பிலுள்ள தங்கத்தை விற்பனை செய்ய வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் காரணமாக தங்கத்தின் விலை இறங்குவதற்கே அதிக முகாந்திரங்கள் இருக்கின்றன.

``விலை ஏற இதுவே காரணம்!’’

2018-ல் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு, 2020-ல் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்க அதிபரின் வரிகள் மற்றும் டேரிஃப் (Tariff) தாக்கங்கள், சமீபத்திய மத்திய கிழக்கு நெருக்கடிகள் ஆகிய காரணங்களால் 2018-ம் ஆண்டு முதல் தங்கம் விலையில் ஏற்றம் காணப்பட்டது.

அதன் பிறகு தங்கத்தின் விலை உயர்வதற்குப் புதிதாக வேறு எந்தக் காரணமும் இல்லை. கொரோனாவைப் போன்ற ஒரு பெரிய பேரிடரோ அல்லது புதிய போரோ வந்தாலே தவிர, தங்கத்தின் விலை மேல் நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

பொதுவாக நாடுகளுக்கு இடையிலான மோதல், மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் போன்ற பதற்றமான சூழல்கள் நிலவும்போது, பங்குச் சந்தையில் நிச்சயமற்ற தன்மை அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க, தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலையும் உயரும். போர்ப் பதற்றம் தணிந்து இயல்புநிலை திரும்பும்போது, முதலீடு செய்த தங்கத்தை விற்று லாபத்தைப் (Profit Booking) பெற்றுக்கொள்வார்கள். அந்தப் பணத்தைப் பங்குச் சந்தைக்கு (Equity Market) மாற்ற அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.

இது போன்ற பல்வேறு காரணங்களால் சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,500 டாலர் வரையிலும், அதிகபட்சமாக 3,100 டாலர் வரையிலும் இறங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு 6 முதல் 15 சதவிகிதம் வரை சுங்க வரி விதிக்கப்படுகிறது.அரசு, வரியைக் குறைத்தால் தங்கத்தின் விலை மேலும் குறையவே செய்யும்.

வெள்ளியும் விலை குறையுமா?

2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் வெள்ளியின் தேவையைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு உற்பத்தி இல்லை. இதனால் சந்தையில் வெள்ளிக்குத் தட்டுப்பாடு இருந்தது. 2025-ம் ஆண்டு ஜனவரியில் 900 மில்லியன் அவுன்ஸ் பற்றாக்குறை இருந்ததால், ஒரு ட்ராய் அவுன்ஸ் வெள்ளியின் (31.1 கிராம்) விலை 121 டாலர் வரை உயர்ந்தது. ஆனால், சோலார் பேனல் (Solar Photovoltaic) தயாரிப்புத்துறையில் வெள்ளிக்கான தேவை குறையத் தொடங்கியிருப்பதால், 2026-ம் ஆண்டின் இறுதியில் பற்றாக்குறை வெறும் 46 மில்லியன் அவுன்ஸ் மட்டுமே. எதிர்காலத்தில் வெள்ளியின் தேவை குறைவாகி, பயன்பாடு மேலும் குறையலாம். இதன் காரணமாக வெள்ளியின் விலை தற்போதைய நிலையிலிருந்து சரிந்து, ஒரு அவுன்ஸ் 40 டாலருக்கும் கீழே செல்ல வாய்ப்பிருக்கிறது.

இனி வரும் ஆண்டுகளில் உற்பத்தியைவிட, தேவை குறைவாகி ‘உபரி' என்ற நிலை வரப்போகிறது. வெள்ளியைப் பொறுத்தவரை, 60 சதவிகிதம் தொழில்துறை பயன்பாடு, 40 சதவிகிதம் மட்டுமே ஆபரணம் மற்றும் காசுகள் தயாரிக்கப்படுகிறது. தொழில்துறை தேவை குறைந்து உபரிநிலைக்குச் செல்லும்போது வெள்ளியின் விலையில் பெரிய சரிவு வரவும் வாய்ப்பிருக்கிறது.

மக்களின் வாங்கும் திறன் குறைவதால், பழைய நகையைக் கொடுத்துப் புதிய நகையை எக்ஸ்சேஞ்ச் செய்கின்றனர். மற்றொருபுறம், நகைக்கடைக்காரர்கள் இந்திய உலோகங்கள் மற்றும் கனிமங்கள் வர்த்தகக் கழகம் (MMTC) போன்ற ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெற்ற டீலர்களிடம் புதிய தங்கம் வாங்கும்போது ஜி.எஸ்.டி மற்றும் இறக்குமதி வரிகள் செலுத்த வேண்டும். ஆனால், வாடிக்கையாளர்களிடமிருந்து பழைய நகைகளை வாங்கும்போது அவர்களுக்கு நேரடியாக மூலப்பொருள் கிடைப்பதுடன் வரிச்சுமையும் குறைகிறது. இதனால்தான் எக்ஸ்சேஞ்ச் நகைகளுக்குத் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. மேலும், ‘அவசரத் தேவைக்கு நகையை அடகுவைக்காதீர்கள், விற்றுவிடுங்கள்' என்பதுபோல விளம்பரங்களும் செய்யப்படுகின்றன” என்று விளக்குகிறார் ஷியாம் சுந்தர்.

ஜெயந்திலால் சலானி, ஷியாம் சுந்தர் இருவரின் கருத்தும் வேறு வேறாக இருக்கும் நிலையில், பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் பேசினோம். “அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் நிர்ணயிக்கும் வட்டி விகிதம் எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்தே தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படும். டிசம்பர் மாதத்தில் அமெரிக்க வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், தங்கத்தின் விலை குறையும். டாலர் மதிப்புகளில் இந்திய ரூபாயின் மதிப்பு 96-லிருந்து 93-க்கு வந்து, வலுப்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,000 டாலருக்குக் குறைந்தால் தங்கத்தின் விலை குறையவே செய்யும்” என்கிறார்.

`சரிப்பா, தங்கம் இப்போ வாங்கலாமா, இல்லை கொஞ்சம் காத்திருந்து வாங்கலாமா?’ என்றுதானே கேட்கிறீர்கள்... சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்கப் பொருளாதாரம், டாலரின் மதிப்பு எனப் பல காரணிகள் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்கின்றன. எனவே, விலை ஏற்ற இறக்கங்களைக் கண்டு அவசரப்பட்டு முடிவெடுக்காமல், நம் தேவை, நிதிநிலை, முதலீட்டு இலக்குகளுக்கு ஏற்ப தங்கத்தை வாங்குவதும், முதலீடு செய்வதுமே புத்திசாலித்தனமான அணுகுமுறை!

எது சிறந்த முதலீடு?

தற்போதைய சூழலில் தங்கத்தைவிட, பங்குச் சந்தை அதிக ஈர்ப்புடையதாக இருக்கிறது. வீட்டுத் தேவைக்கான ஆபரணத் தங்கம் வாங்குவது அவரவர் தேவை சார்ந்தது. ஆனால், முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்க விரும்புவோர் ஒரே நேரத்தில் மொத்தமாக வாங்காமல், SIP (Systematic Investment Plan) முறையில் மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். சந்தையில் தங்கம் விலை நன்கு குறையும் நாள்களில் கூடுதல் தொகையைச் செலுத்தி வாங்கலாம். ஆனால், விலை ஏறிக்கொண்டே இருக்கும்போது அதைப் பின்தொடர்ந்து வாங்குவது நல்ல முதலீட்டு அணுகுமுறை அல்ல.

சீனா வாங்கும்போது நாம் வாங்கக் கூடாதா?

‘மத்திய வங்கிகள் தங்கம் வாங்குகின்றன. சீனா தொடர்ந்து 24-வது மாதமாக வாங்குகிறது. ஒரு நாடே தங்கம் வாங்கும்போது 'நான் ஏன் வாங்கக் கூடாது?' என்று சாமானியர்கள் மத்தியில் ஒரு கேள்வி இருக்கிறது. இன்று வாங்கினால் நாளை விலை அதிகரிக்கும் (Appreciation) என்ற கோணத்தில் சில்லறை முதலீட்டாளர்களாகிய நாம் வாங்குகிறோம். ஆனால் ஒரு நாடு எதற்காக வாங்குகிறது... அவர்களிடமுள்ள அந்நியச் செலாவணிக் கையிருப்பு டாலராகவோ, அரசுக் கடன் பத்திரங்களாகவோ (Treasury Bonds) அல்லது தங்கமாகவோ இருக்கும். டாலர் அதிகமாகக் கையிருப்பு இருக்கும்போது, அதில் ஒரு பகுதியை விற்றுவிட்டு, தங்கமாக மாற்றுவார்கள். ஏனெனில், ஏற்கெனவே ரஷ்யாவின் முதலீடுகள் மீது அமெரிக்கா தடைகளை விதித்ததைப்போல், தங்களுக்கும் ஆகிவிடக் கூடாது என்ற அடிப்படையில், பாதுகாப்பு கருதி டாலரை விற்றுத் தங்கமாக மாற்றுகிறார்களே தவிர, விலை ஏறும் என்ற அடிப்படையில் அவர்கள் வாங்கவில்லை. சீனா அல்லது மத்திய வங்கிகள் வாங்குவதையும், தனிநபர்கள் வாங்குவதையும் ஒன்றாக ஒப்பிடக் கூடாது.