📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 20, 2026 06:04 PM

சரிந்து விழுந்து ரயில் மீது மோதிய பாறை

சரிந்து விழுந்து ரயில் மீது மோதிய பாறை

அரூர்: தருமபுரி அருகே கனமழை காரணமாக குன்றிலிருந்து சரிந்த பாறை நாகர்கோவில்-பெங்களூர் ரயில் மீது மோதியது. லேசான அளவில் சேதம் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு நோக்கிப் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை சேலத்தைக் கடந்து தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி மற்றும் சிவாடி ரயில் நிலையங்களுக்கு இடையே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அதிகாலை பெய்த கனமழை காரணமாக கடுமையான மண்ணரிப்பு ஏற்பட்டு, அருகில் இருந்த குன்றிலிருந்து பாறை ஒன்று உருண்டு தண்டவாளத்தில் விழுந்தது. மெதுவாக சென்று கொண்டிருந்த ரயிலின் முன்பக்க பயணிகள் பெட்டியின் சக்கரப் பகுதிக்கு அருகே இருந்த ஷாக் அப்சார்பர் மீது பாறை பலமாக மோதியதில் அப்பாகம் பழுதடைந்தது.

உடனடியாக ரயிலை நிறுத்தி பார்த்தபோது, பெரிதாக பாதிப்பு இல்லாத நிலையில் மீண்டும் ரயில் பாதுகாப்பாக தருமபுரி ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர், ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பழுதடைந்த பாகங்களை விரைவாகச் சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து அரை மணி நேர தாமதத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் குறித்து தருமபுரி இருப்புப் பாதை (ரயில்வே) காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முத்தம்பட்டி ரயில் பாதை இரண்டு மலைகளுக்கு நடுவே செல்வதால், மழைக்காலங்களில் இதுபோன்ற மண்ணரிப்பு ஏற்பட்டு பாறைகள் அடிக்கடி விழுந்து வருவதால், மூன்று அடுக்குகளாக கம்பி வலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த பாறை விழுந்த பகுதி கம்பி வலை அமைக்காத பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பாறை வேகமாக விழுந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் வாய்ப்புள்ள நிலையில், நல்வாய்ப்பாக அது தவிர்க்கப்பட்டது.