📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 20, 2026 06:04 PM

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் குடமுழக்கு: 2027 ஏப்ரல் 11

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் குடமுழக்கு: 2027 ஏப்ரல் 11

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் குடமுழக்கு 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1853ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில், ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூரின் இரண்டாவது பழைமையான இந்துக் கோவிலாக விளங்குகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குடமுழக்கை முன்னிட்டு, கோவிலின் சமயப் பணிகளுடன் சமூகத்துக்கான சேவைகளையும் விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற அறிவிப்பு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

“கோவில் என்பது வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல. அது கலைக்கான ஓர் இடமாகவும் சமூகத்தினர் ஒன்றுகூடும் இடமாகவும் இருக்கவேண்டும். நமக்குப் பின்னரும் இந்தக் கோவில் நிலைத்திருக்கப்போகிறது. அதனால், அதை மேம்படுத்துவதற்கான எங்களது பணிகள் மிகவும் முக்கியமானவை,” என்று ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் தலைவர் ராஜகாந்த் ராமன் கூறினார்.

கோவில் மூலம் பக்தர்களுக்குக் கூடுதல் சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். நடனப் பயிற்சிகளுக்கான மையமாகக் கோவில் வளாகத்தைப் பயன்படுத்தும் வகையில் உஷாராணி மணியம் நடனக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது, முடிந்த அளவுக்குத் தாள்களின் பயன்பாட்டைக் குறைத்து, மின்னிலக்க முறைகளைப் பயன்படுத்தி கழிவுகளைக் குறைப்பது ஆகியவை அவற்றில் அடங்கும்.

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக, சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் கோவிலுக்கு எளிதாகச் சென்றுவரும் வசதிகளை மேம்படுத்துவதும் முக்கியப் பணிகளில் ஒன்று என அவர் கூறினார்.

“கோவிலில் இளையர்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் முயற்சி செய்து வருகிறோம். இதன் மூலம் எங்களது நடைமுறைகளையும் மரபுகளையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்க முடியும். எதிர்காலத் தலைமுறைகளை அவர்கள் வழிநடத்துவதற்கும் இது வழிவகுக்கும்,” என்றார் திரு ராஜகாந்த்.

இதனிடையே, சமூகத்தை ஆதரிக்கும் கல்வி, சமூக சேவைத் திட்டங்களில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றும் சிண்டாவுடன் கையெழுத்திடப்பட்டது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“இது மிக முக்கியமான புரிந்துணர்வுக் குறிப்பாகும். கோவில் வளாகங்களைச் சமய நோக்கங்களுக்காக மட்டுமல்லாமல், ஆலோசனைச் சேவைகள், சுகாதாரக் கலந்துரையாடல்கள் போன்ற சமூக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியும் என்பதை மற்ற கோவில்களுக்கு இது எடுத்துக்காட்டுகிறது.

“அனைவரையும் உள்ளடக்கிய சமூக இடங்களாகக் கோவில் வளாகங்களை மாற்றுவதற்கு மேலும் பல சமூகப் பங்காளிகளை இணைத்துக்கொள்ள சிண்டா தற்போது முனைப்புடன் செயல்பட்டு வருகிறது,” என்று சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.

குடமுழக்கு 2027ல் நடைபெறவுள்ள நிலையில், லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் ஆதரவும் அங்கீகரிக்கப்பட்டது. குடமுழக்கின்போது அன்னதானத்துக்கும் அது ஆதரவு வழங்கவுள்ளது.

“எங்களது முக்கிய நோக்கம் எப்போதும் பக்தர்களை முன்னிலைப்படுத்துவதாகும். பிரசாத விநியோகிப்பையும் தொடர்ந்து செய்துவருகிறோம். பாலஸ்தாபனக் காலத்திலும் இதை நிறுத்தவில்லை. வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் ஈர்க்கும் கோவிலாகவும் எங்களது ஆலயம் விளங்குகிறது. அவர்களுக்காகவும் தொடர்ந்து சேவைகளை வழங்கி வருகிறோம்,” என்றார் 41 வயது ஆலய மேலாளர் சு. முத்து சரவணன். கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் ஆலய மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

“எனது பெற்றோர் என்னையும் எனது சகோதரிகளையும் இந்தக் கோவிலுக்கு அழைத்து வருவார்கள். அப்போது கோவில் ஒரு குடிசையாக இருந்தது. எனக்கு அப்போது ஏறக்குறைய ஏழு வயது. இந்தக் கோவில் எப்போதும் எனக்கு அமைதியைத் தரும் இடமாக இருந்துள்ளது. இப்போது அது சமூகத்தினருக்கான ஓர் இடமாக மாறுவதற்கு இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்வதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது.

“நானும் இங்கு வருபவர்களுக்கு, குறிப்பாக, தொண்டூழியர்களுக்கு வழிகாட்டி உதவி செய்து வருகிறேன்,” என்று கோவிலின் மேலாண்மைக் குழு உறுப்பினர் பத்மினி குருபாலன் கூறினார்.