📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 14, 2026 09:03 AM

சுப்மன் கில் வெற்றிகளை குவிக்காமல் இருந்தும், அவரை சிறந்த கேப்டன் என கூறுவது ஏன்? ஹர்பஜன் பதில்

சுப்மன் கில்  வெற்றிகளை குவிக்காமல் இருந்தும், அவரை சிறந்த கேப்டன் என கூறுவது ஏன்? ஹர்பஜன் பதில்

சுப்மன் கில் வெற்றிகளை குவிக்காமல் இருந்தும், அவரை சிறந்த கேப்டன் என கூறுவது ஏன்? ஹர்பஜன் பதில்

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இரு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் சனிக்கிழமை, ஆகஸ்ட் 15 அன்று காலே மைதானத்தில் தொடங்குகிறது. கேப்டனாக ஷுப்மன் கில்லின் ஆரம்பகட்டம் சவால்கள் நிறைந்ததாகவும், ஏற்ற இறக்கங்கள் கொண்டதாகவும் அமைந்தது.

இருப்பினும், மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இளம் இந்திய அணியை இங்கிலாந்து மண்ணில் அவர் வழிநடத்திய விதத்தை ஹர்பஜன் சிங் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அத்துடன் கில்லின் கேப்டன்சி திறமையையும் அவர் புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங் "கில் கேப்டனாக பெரிய அளவில் வெற்றிகளைப் பெறவில்லை என்று சிலர் கூறலாம். ஆனால், இங்கிலாந்து தொடரில் அவரது கேப்டன்சி திறனும், மனவலிமையும் மிகச்சிறப்பாக வெளிப்பட்டதாக நான் கருதுகிறேன். ஒரு கேப்டனாகவும், தலைவராகவும், பேட்டராகவும் அவரால் என்ன செய்ய முடியும் என்பதற்கு அது ஒரு சிறந்த உதாரணம்.

அந்தத் தொடரில் மற்ற அனைவரையும் விட அவர் அதிக ரன்களை குவித்தார். அங்கு அணி விளையாடிய விதம் மற்றும் அவர்களின் மனநிலை ஆகியவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான் அவரை நான் உயர்வாக மதிப்பிடுகிறேன். அந்த அணி முழு அர்ப்பணிப்புடன் விளையாடியது தெரிந்தது. ஃபார்மில் ஏற்ற இறக்கங்கள் வருவது இயல்பு தான். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அவர் சிறந்த கிரிக்கெட் அறிவைக் கொண்ட ஒரு தலைசிறந்த வீரர்" என்று குறிப்பிட்டார்.

இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட வெளிநாட்டு டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. இதில் கேப்டனாக முன்னின்று வழிநடத்திய கில், 5 போட்டிகளில் 75.40 சராசரியுடன் ஒரு இரட்டைச் சதம் உட்பட 4 சதங்கள் விளாசி 754 ரன்கள் குவித்தார். கில் இன்னும் பெரிய அளவில் வெற்றிகளைக் குவிக்கவில்லை என்றாலும், அவர் ஒரு சிறந்த கேப்டனாகவே செயல்பட்டுள்ளார் என்று ஹர்பஜன் சிங் மேலும் தெரிவித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால், மீதமுள்ள 9 போட்டிகளில் 8-ல் இந்தியா வெற்றி பெற வேண்டும். எனவே, இலங்கை தொடரில் இருந்து இந்திய அணி தனது முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. . இதுவரை அவர் 9 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய கில், 5 வெற்றிகள், 3 தோல்விகள் மற்றும் ஒரு டிராவைப் பெற்றுத் தந்துள்ளார்.