ஏர் இந்தியா: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூடுதல் நிதி கோரிக்கையை பரிசீலிக்கிறது
ஏர் இந்தியா நிறுவனத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி ஆதரவு குறித்து நிர்வாகக் குழு கவனமாகப் பரிசீலிக்கும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) தெரிவித்தது.
டாடா சன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய இணை உரிமையாளர்களிடமிருந்து 1.95 பில்லியன் (1.5 பில்லியன் அமெரிக்க டாலர்) கூடுதல் நிதியை ஏர் இந்தியா கோரியுள்ளது.
ஏர் இந்தியாவைச் சீரமைக்கவும் அதன் வருங்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும் இந்த நிதி தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டாடா குழுமத்தின் கூட்டு முயற்சியில் உருவான விஸ்தாரா நிறுவனம், ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 25.1 விழுக்காட்டுப் பங்குகளைக் கொண்டுள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் தங்களது உத்திபூர்வ நிலையை வலுப்படுத்த ஏர் இந்தியாவுடனான இந்த இணைப்பு மிகவும் முக்கியமானதாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கருதுகிறது.
எனினும், வர்த்தக ரீதியிலான சாத்தியக்கூறுகள், நிதி நிலைமை, சந்தை நிலவரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே கூடுதல் நிதி தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஏர் இந்தியாவின் இழப்புகளை ஈடுகட்டச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூலமாக தெமாசெக் அமைப்பின் நிதியைப் பயன்படுத்துவதை ஆதரிக்க முடியாது என ஃபேஸ்புக் பதிவொன்றில் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் தியோங் பூன் கியாட் கருத்துத் தெரிவித்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மேலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது சொந்த பலத்திலேயே முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இது தொடர்பாகச் செப்டம்பர் 8ஆம் தேதி நடக்கும் நாடாளுமன்ற அமர்வில் பதிலளிக்கக் கோரி போக்குவரத்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏர் இந்தியாவின் நிதித் தேவை, சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரின் கவலைகள் குறித்து ஏர் இந்தியா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.