📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 13, 2026 05:03 PM

எட்டோமிடேட் கலந்த போதைப்பொருள் விநியோகம்: ஆடவருக்குச் சிறை, பிரம்படி

எட்டோமிடேட் கலந்த போதைப்பொருள் விநியோகம்: ஆடவருக்குச் சிறை, பிரம்படி

சிங்கப்பூரில் எட்டோமிடேட் கலந்த போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட ஆடவர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

சென்ற ஆண்டு செப்டம்பர் 10 முதல் 25ஆம் தேதி வரை பதினாறே நாள்களில் $28,300 வருமானம் ஈட்டிய ‘கேபோட்’ தொடர்புடைய போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக டான் ஜியா வெய் எனும் அந்த ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

வாடிக்கையாளர்கள் போதைப்பொருளைப் பெறுவதற்காகத் தகவல் அனுப்பும் செயலியில் கணக்கு ஒன்றை அவர் நிர்வகித்து வந்தார்.

போதைப்பொருள்களைப் பொட்டலமிடுவதற்கான கோரிக்கைகளை ஒருங்கிணைத்தல், விற்பனையில் கிடைத்த பணத்தைச் சேகரித்தல், பொட்டலமிடுவதற்குக் கும்பலில் மற்றொருவரை வேலைக்கு அமர்த்தல் முதலிய சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார்.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) 30 வயது டானுக்கு நான்கு ஆண்டுகள், ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

மற்றொரு நபர் போதைப்பொருள்களைக் கடத்துவதற்காகக் குறைந்தது 461 உறைகளை வைத்திருந்த சதித்திட்டத்தில் பங்கு வகித்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், எட்டோமிடேட் பயன்படுத்தியது, போதைப்பொருள் விற்பனை மூலம் மொத்தம் $28,300 பெறுமானமுள்ள பலன்களைப் பெற்றது ஆகிய இரு குற்றச்சாட்டுகளையும் டான் ஒப்புக்கொண்டார்.