குழந்தையை துன்புறுத்திய பணிப்பெண் மீது குற்றச்சாட்டு
ஐந்து மாத ஆண் குழந்தையைக் கடித்து, உலுக்கி, அடித்து, கைகால்களைத் திருகி, மூச்சுத்திணறச் செய்து பலவாறு கொடுமைப்படுத்தியதாக பணிப்பெண் மீது செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மியன்மார் நாட்டவரான 24 வயது லை யீ பியோ, பொங்கோலில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பலமுறை குழந்தையைச் சித்திரவதை செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 2ஆம் தேதி அவர் குழந்தையை வேகமாகத் தொடர்ந்து உலுக்கியதுடன் அதன் தலையில் அடித்துள்ளார். கன்னத்தில் கிள்ளி, தொண்டையைப் பிடித்து மூச்சுத் திணறவைத்துள்ளார். ஏப்ரல் 4ஆம் தேதி குழந்தையின் தலையில் மீண்டும் அடித்துள்ளார்.
ஏப்ரல் 7ஆம் தேதி குழந்தையை வன்முறையாக உலுக்கி, அதன் கைகளை மார்போடு அமுக்கித் தாக்கியுள்ளார். ஏப்ரல் 8ஆம் தேதி மீண்டும் உலுக்கி, குழந்தையைக் கன்னத்தில் அறைந்து, வாயில் சூப்பியை வலுக்கட்டாயமாகத் திணித்துள்ளார். ஏப்ரல் 13ஆம் தேதி குழந்தையை உலுக்கியதுடன், நெற்றியில் அடித்து, கட்டிலில் வீசியெறிந்தார். தொடர்ந்து அறைந்தும் உள்ளார். மறுநாளும் குழந்தையைத் துன்புறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 15ஆம் தேதி குழந்தையின் இடுப்புப் பகுதியில் கடித்தார். ஏப்ரல் 16ஆம் தேதி குழந்தையைக் கட்டிலில் தூக்கி வீசியும் தலையிலும் முதுகிலும் அடித்தும் சித்திரவதை செய்தார். ஏப்ரல் 19ஆம் தேதி குழந்தையை அறைந்து, கட்டிலில் வீசி, தலை, காது, கால்களைத் திருகியதாகக் கூறப்படுகிறது. அன்றைய தினம் முழங்கையிலும் அவர் கடித்துள்ளார்.
குழந்தையின் தற்போதைய நிலை, அப்பெண்ணிற்கும் குழந்தைக்குமான தொடர்பு பற்றி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. அப்பெண் நவம்பர் 10ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தை துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு எட்டு ஆண்டுகள் வரை சிறை, $8,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இவ்வாரத்தில் பதிவான இரண்டாவது குழந்தை துன்புறுத்தல் வழக்கு இது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மற்றொரு வழக்கில், டிரெவர் என்ற எட்டு மாதக் குழந்தையைக் கொடுமைப்படுத்தி உயிரிழக்கச் செய்த அதன் பெற்றோர் குளோய் கான் சி சுவான் 23, நெயோ ஜியா மிங் 27 இருவரும் திங்கட்கிழமை (அக்டோபர் 12) குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு அக்டோபர் 21ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.