ஹிந்து மதம் மனித குல ஒற்றுமையை நம்புகிறது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
நியூயார்க்: ஹிந்து மதம் மனித குல ஒற்றுமையை நம்புகிறது என்று கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ''இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று எந்து ஹிந்து நினைத்தாலும் அவர் ஒரு ஹிந்து கிடையாது'' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற 'யுனிவர்சல் ஒன்2026' விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: இந்தியா பல்வேறு வேறுபாடுகளுக்கு இடையே ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் நாடாகத் திகழ்கிறது;
நமது தற்போதைய அரசியல் சூழல் சுயநலம் சார்ந்ததாக மாறிவருகிறது. ஹிந்து மதம் மனித குல ஒற்றுமையை நம்புகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று எந்து ஹிந்து நினைத்தாலும் அவர் ஒரு ஹிந்து கிடையாது.
மதச் சடங்குகளில் வேறுபாடுகள் இருந்தாலும், மனிதநேயம் ஒன்றே என்பதைத்தான் இந்தியக் கலாச்சாரம் நமக்குக் கற்பிக்கிறது. வெவ்வேறு மத நடைமுறைகள் இறுதியில் ஒரே உண்மையையும் இறைத் தன்மையையுமே அடைகின்றன.
வேற்றுமையில் ஒற்றுமையே நாட்டின் பலம்; வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு விசுவாசமாகவும், தங்களின் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கண்ணியம் உண்டு. மனிதர்களிடையே எந்த வேறுபாடும் இல்லை. பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். பாரதத்தைப் பொறுத்தவரை, இந்த ஒற்றுமையும் வேற்றுமையும், இரண்டுமே மரபணுவிலேயே உள்ளன.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இயற்கையின் உண்மையான தத்துவம். பாரதம் வரலாற்று ரீதியாகவே அனைத்து மதத்தினருக்கும் புகலிடம் அளித்து ஒற்றுமையாக வாழும் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.