📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 09, 2026 02:33 AM

ஈரான் போர்: வர்த்தகத் தடைகளால் திகைத்து நிற்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

ஈரான் போர்: வர்த்தகத் தடைகளால் திகைத்து நிற்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் தரப்புகளுக்கு இடையிலான மோதல் உலகளாவிய வணிகத்தை முடக்கியுள்ளதுடன் சிங்கப்பூர் நிறுவனங்களையும் பாதித்துள்ளது.

அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் அமெரிக்க விமானத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கியதால் வளைகுடா நாடுகளுக்குப் போர் பரவியது. அவ்வட்டாரத்தின் கடல்சார்ப் பாதைகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலால் அங்கு இயல்புநிலை இல்லை.

தடைசெய்யப்பட்ட வணிகப் பாதைகள், தடங்கலுக்கு உள்ளாகியுள்ள வணிகப் பொருள்கள் விநியோகம், உறுதியற்ற சந்தை நிலவரம் ஆகியவற்றுக்கு இடையே சிங்கப்பூர் நிறுவனங்களின் நிலைமையை அறிய முற்பட்டது தமிழ் முரசு.

‘தற்போதைய போர்ச் சூழல் சிங்கப்பூர் நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகளைப் பாதித்துள்ளதா? இத்தகைய அசாதாரண நிலைமைகளைச் சமாளிக்க அவசரகாலத் திட்டங்கள் ஏதேனும் நடைமுறையில் இருந்தனவா?’ என்ற கேள்விகளைத் தொழில்நிறுவனங்களிடம் முன்வைத்தோம். அவற்றுக்கான பதில்களில் கிடைத்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

தரைதட்டி நிற்கும் கடல்சார் தொழில்துறை

கடல்சார் வணிகம், வளைகுடா நாடுகளில் இருந்து பிறநாடுகளுக்குத் தருவிக்கப்பட்ட உற்பத்திப் பொருள்கள், விநியோகத் தளவாடங்கள் சார்ந்த இறக்குமதி எனப் பற்பல வணிக நடவடிக்கைகள் இந்தப் போர்ப் பதற்றத்தினால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.

போர் காரணமாக கடல்வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் மத்திய கிழக்கிலிருந்து கப்பலில் வந்து சேர வேண்டிய சரக்குகள் உரிய நேரத்தில் வரவில்லை என்று தெரிவித்தார் திரு வசந்தகுமார், 50. இவர் ‘பெஸ்ட் கான்ஃபிடன்ஸ் மரீன் ஷிப்யார்ட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.

சிங்கப்பூரிலும் துபாயிலும் இயங்கும் இவரது நிறுவனங்கள் கடல்சார் பட்டறைக்கான பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

‘‘போர் தொடங்கியதிலிருந்து சந்தைச் சூழல் முற்றாக மாறிவிட்டது. வளைகுடா நாட்டில் இப்படியொரு சூழல் வரும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அதனால் அவசரகாலத் திட்டம் எதுவும் கைவசமில்லை,’’ என்றார் அவர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஊழியர்களைப் பாதுகாப்பாக இருப்பிடங்களில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளதாகச் சொன்ன வசந்த், ‘‘ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து எங்கு வந்து விழும் என்று தெரியாததால் நிறுவன ஊழியர்களைப் பணி நிமித்தம் வெளியே அனுப்ப முடியாது. கடல்சார்ந்த தொழில் என்பதால் அறைக்குள் செய்யும் வேலையாக இதனை மாற்றவும் வழியில்லை,’’ என்று கவலை தெரிவித்தார்.

பொருள்களை மறுசுழற்சி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார் திரு பாலசந்தர், 57. கடல்வழிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால் ஏறத்தாழ 15க்கும் மேற்பட்ட கப்பல்களில் அனுப்பப்பட்ட சரக்குகள் இன்னும் வந்துசேரவில்லை என்றார் அவர்.

சிங்கப்பூரில் அமைந்துள்ள அவரது நிறுவனத்தின் பெயர் டார்ஸன் இன்டர்நேஷனல். வணிகத்திற்காக வாங்கப்பட்டிருந்த குழாய்கள், உலோகத் தட்டுகள், மின்னணுச் சாதனங்கள் என முக்கியப் பொருள்கள் எதுவும் வந்து சேரவில்லை. இதனால் பொருள்களை வாங்கி, பிற நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையும் தாமதமாகிறது,” என்றார் பாலசந்தர்.

போர்ச் சூழலால் வணிகத்தில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தாங்கள் கொண்டிருக்கும் காப்புறுதியால் முடியாது. இத்தகைய காலவிரயத்தால் வளங்களும் வீணாகும். ஒவ்வொரு நாளும் கூடுதல் செலவுகள் ஏற்படும்,’’ என்றார் அவர். சிங்கப்பூரில் ஏறத்தாழ 14 ஆண்டுகளாகக் கட்டுமானத் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார் திரு வெங்கடேசன் கார்த்திக், 52.

துபாயில் இத்தனை ஆண்டுகளாக நிலவிய சாதகமான வர்த்தகக் கட்டமைப்புகளைக் கருத்தில்கொண்டு வர்த்தகத்தை துபாயிலும் நிறுவத் திட்டமிட்டார் அவர்.

‘‘இதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், சற்றும் எதிர்பாரா வகையில் போர் தொடங்கிவிட்டதால், அடுத்து என்னவென்பதைக் கணிக்க முடியவில்லை,’’ என்றார் கார்த்திக்.

‘‘சுற்றுலா நடுவம். நேரடியாக எந்தப் போரிலும் ஈடுபடாத நாடு. போக்குவரத்து வசதிகளுக்கும் குறைவில்லை. இப்படிப் பல சாதகங்கள் வளைகுடா நாடுகளில் உள்ளதாக எண்ணித்தான் இத்திட்டத்தை வகுத்தோம். ஆனால் இனி சிங்கப்பூரை விட்டு வெளியே வர்த்தகம் செய்ய வேண்டுமா என்ற எண்ணமே எஞ்சியுள்ளது,’’ என்றார் அவர்.

வர்த்தகம் மெதுவடைந்தால் புதிய வாய்ப்புகள் குறையக்கூடும்

மென்பொருள் தொழில்நுட்பம் சார்ந்த துறையில் பணியாற்றும் திரு சுரேஷ்குமார் 51, துபாயில் வசிக்கிறார். இவரது பணியிடம் அபுதாபி. போர்ச் சூழலால் கணினித் துறைக்கு அவ்வளவு பெரிய பாதிப்பு இல்லை. பணி எப்போதும்போலத் தொடர்கிறது. மென்பொருள் வல்லுநராக இருந்தாலும், வர்த்தகம் செயல்படாவிட்டால் அவரது துறை பாதிக்கப்படும். வருமானம் குறைந்து செலவுகள் உயரும்போது, நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கத் தாமதமாகலாம். இது நாளடைவில் வேலை இழப்பு, நிறுவனம் மூடப்படுதல் எனப் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றார் சுரேஷ்.

பெரிய நிறுவனங்கள் அவசரகாலத் திட்டத்தை வகுத்து வைத்திருக்கலாம். ஆனால் அன்றாட வணிக நடவடிக்கைகள், பணப் பரிவர்த்தனைகள், கணிசமான முதலீடுகள், ஈடுகட்டக் கூடிய வகையில் பெறப்பட்ட கடன்கள் என்ற அட்டவணையை வகுத்து அதன்படி செயல்பட்டு வந்த சிறிய, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் திகைப்பில் ஆழ்ந்துள்ளன.

போர்க் கால இழப்பீடுகள்: காப்புறுதி கிடைக்குமா?

இதற்கிடையே வர்த்தகங்கள், குறிப்பாகக் கடல்துறை சார்ந்த தொழில் நடத்திவரும் நிறுவனங்களுக்குக் கைகொடுக்க, காப்புறுதியில் இடமுள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்தார் கடல்சார் சட்டங்கள், நிபுணத்துவம் குறித்த சட்ட ஆலோசனைகளை வழங்கும் வழக்கறிஞர் ஜெயபாலன், 70.

காப்புறுதித் திட்டங்களில் உள்ள நிலையான ‘போர் விலக்கு நிபந்தனைகள், கடல்வழி வர்த்தகத்தில் பொதுவானதாக இருக்கும். நாடுகளுக்கு இடையிலான பகை (எடுத்துக்காட்டாக, மத்திய கிழக்கு மோதல்), நாடுகளின் ஒருதலைப்பட்சமான படையெடுப்பு, அல்லது சட்டவிரோதச் செயல்கள் (எ.கா. ஈரான்) போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதைக் காப்புறுதிகள் தவிர்க்கின்றன,’’ என்றார் அவர்.

அதாவது, பயங்கரவாதத் தாக்குதல்கள், போர் அபாயங்கள் சார்ந்த இழப்பீடுகள் வழக்கமான காப்புறுதிகளில் இடம்பெறுவதில்லை. அதன் அடிப்படையில் மத்திய கிழக்கு மோதல் காரணமாகச் சரக்குகள் தாமதமானாலோ சேதமடைந்தாலோ, குறிப்பிட்ட காப்புறுதித் திட்டத்தில் ‘போர் விலக்கு நிபந்தனை’ இருந்தால், காப்புறுதிப் பாதுகாப்பு அவற்றுக்குப் பொருந்தாது.

இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த சிங்கப்பூர் உற்பத்திக் கூட்டமைப்பு மன்ற உறுப்பினர் மோகன் குமார், சிங்கப்பூரைப் பொறுத்தவரை எண்ணெய் விலை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நிலையற்ற தன்மை வலுப்பதும் போரினால் ஏற்படும் முக்கியப் பாதிப்பு என்றார்.

“ஈரான் போரால் ஏற்படும் எண்ணெய் விலை உயர்வு, சந்தை ஏற்ற இறக்கங்கள், போக்குவரத்துத் தடைகள் போன்றவை சிங்கப்பூர் வர்த்தகங்களைப் பாதிக்கும். இந்த எதிர்பாரா நிகழ்வுகள் கப்பல், விமானச் சரக்குப் போக்குவரத்தில் செலவு அதிகரிப்பதற்கும் வழிவகுத்துள்ளன,’’ என்றார் மோகன் குமார்.

இதன் விளைவாக எரிசக்தி விலை உயரும். நிலைமை எப்போது சீராகும் என்று தெளிவாகக் கூறமுடியாது என்பதால் நிலையற்ற சுழற்சி உருவாகியுள்ளதாகக் கூறிய அவர், ‘‘முதலீடுகள் உட்பட புதிய திட்டங்களை வணிகங்கள் தாமதப்படுத்தலாம். இது பணவீக்க அதிகரிப்பிற்கும் வழிவகுக்கலாம்,’’ என்றார்.