இந்திய அணியில் 6
இந்திய அணியில் 6-7 பயிற்சியாளர்கள் இருந்து என்ன பயன்? 2வது டெஸ்ட் டிரா ஆனதால் கையிப் கடுப்பு
கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சோனல் தினுஷாவின் பலவீனத்தைக் கண்டறியத் தவறியதற்காக ஷுப்மன் கில் மற்றும் அவரது குழுவினரை முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணியில் இவ்வளவு பெரிய உதவிப் பணியாளர்கள் இருந்தும், சோனலுக்கு எதிராக ஒரு துல்லியமான திட்டத்தை வகுக்கத் தவறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில், தினுஷா 264 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் குவித்தார். இவரது சிறப்பான ஆட்டம், ஃபாலோ-ஆன் செய்யப்பட்ட போதிலும் இலங்கை அணி தோல்வியைத் தவிர்க்க உதவியது.
சோனி ஸ்போர்ட்ஸ் தளத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய முகமது கைஃப், '"ஒவ்வொரு பேட்டருக்கும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கும். அந்த பலவீனம் என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டும். நான் கில்லை மட்டும் சொல்லவில்லை, ஒட்டுமொத்த பந்துவீச்சு குழு மற்றும் பயிற்சியாளர்கள் குழுவைப் பற்றி பேசுகிறேன்."
"அவர் காலே போட்டியில் சதம் அடித்ததை அனைவரும் ஒன்றாக அமர்ந்து விவாதித்து, தற்போது அவர் விளையாடும் போது அவரை எப்படி வீழ்த்தலாம் என்று திட்டமிட்டிருக்க வேண்டும். நமது வீரர்கள் ஆக்ரோஷமாக பந்துவீசவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மைதானத்தில் நேற்றைய தினம் ஃபீல்டிங் வியூகம் தளர்த்தப்பட்டதுடன், டிரைவ் ஆடுவதற்கான பந்துகளும் வீசப்படவில்லை" என்று கையிப் கூறினார்.
"சாரண்ஷ் ஜெயின் அவரது சதத்திற்குப் பிறகு இதே போன்ற ஒரு பந்துவீச்சில்தான் அவரை ஆட்டமிழக்கச் செய்தார். முகமது சிராஜ் ஒரு ஃபுல் லென்த் பந்தை வீசியபோது, தினுஷா டிரைவ் ஆட விரும்பாததால் அதைத் தவிர்த்தார். அவருக்கு டிரைவ் ஷாட்கள் ஆடப் பிடிக்காது. நாம் இந்திய அணியைப் பற்றி பேசுகிறோம்."
"இது ஏதோ உள்ளூர் கிளப் போட்டி அல்ல. அணிக்கு உதவ ஒரு video analyst, ஒரு புள்ளியியல் நிபுணர் மற்றும் சுமார் ஆறு அல்லது ஏழு பயிற்சியாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள்" என்று சாடினார். இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில், சாரண்ஷ் ஜெயின் சோனல் தினுஷாவை ஆட்டமிழக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த விக்கெட்டின் போது ஆஃப் ஸ்பின்னரின் ஃபுல் லென்த் பந்தை தினுஷா அடிக்க முயன்றபோது, பந்து எட்ஜ் ஆகி ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்றிருந்த கே.எல். ராகுலிடம் தஞ்சமடைந்தது.