📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 26, 2026 07:05 PM

கே.என்.நேரு கோபம் அடைந்தது ஏன்? அமைச்சர் விஸ்வநாதன் பதில்

கே.என்.நேரு கோபம் அடைந்தது ஏன்? அமைச்சர் விஸ்வநாதன் பதில்

கே.என்.நேரு கோபம் அடைந்தது ஏன்? அமைச்சர் விஸ்வநாதன் பதில்

"நீங்கள் எவ்வளவு பெரிய கவிஞராக கூட இருக்கலாம். ஆனால் இப்படி ஒரே வார்த்தையை இரண்டு முறை கூறினால், அவை உறுப்பினர்கள் எல்லாம் எப்போது பேரவையில் இருந்து கிளம்புவது?" என்று கே.என். நேரு கேள்வி எழுப்பினார்.

Published : August 26, 2026 at 5:58 PM IST

சென்னை: சட்டப் பேரவையில் ஒரே வார்த்தையை இருமுறை கூறுவது ஏன்? என திமுக உறுப்பினர் கே.என்.நேரு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் "தமிழ்நாட்டில் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக தமிழில் கவிஞர்கள் ஒரு வரியை இரண்டு முறை ஆழமாக சொல்வது மரபாக உள்ளது. கவிஞர் வாலி, கவிஞர் கண்ணதாசன், கவிஞர் புலமைப்பித்தன் உள்ளிட்ட பலர் ஒரு வரியை இரண்டு முறை உச்சரித்துள்ளனர்.

ஆனால் நான் கவிஞன் அல்ல, நான் படித்ததை சட்டமன்றத்தில் முன்மொழிந்தேன் அவ்வளவுதான். அதில் அண்ணன் நேருவுக்கு ஏதோ ஒரு வகையில் பிரச்சனை இருப்பதால். அது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார். எங்களுக்கு அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை . நாங்கள் நினைப்பதை சட்டமன்றத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

எனது மானியக் கோரிக்கையில் பல்வேறு அருமையான நலத்திட்டங்களை அறிவித்துள்ளோம். கல்லூரி பேராசிரியர்களில் 2021-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த பணி மூப்பு தொடர்பான பலன்கள் வழங்கப்படாமல் இருந்தன. உதவிப் பேராசிரியர் முதல் இணைப் பேராசிரியர் வரை சுமார் 6 ஆயிரம் பேருக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அந்தப் பணி மூப்பு பலன்களை அறிவித்துள்ளோம். அந்தப் பலன்கள் செப்டம்பர் முதல் வாரம் முதல் பேராசிரியர்களுக்கு கிடைக்கும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளோம்.

அதே போல் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கும் பணி மூப்பு பலன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் கெஸ்ட் லெக்சரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 30 ஆயிரம் தொகையை 5 ஆயிரம் உயர்த்தி 35 ஆயிரமாக முதலமைச்சர் உயர்த்திக் கொடுத்துள்ளார். மேலும் சுமார் 125 கல்லூரி முதல்வர்களுக்கான நியமனத்தை எந்தவித லஞ்சம் ஊழல் இல்லாமல் வெளிப்படையான முறையில் மேற்கொள்ள உள்ளோம்.

மாணவர்களுக்கு பிணையில்லாமல் 20 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்திருப்பது மிகவும் முக்கியமானது. முன்பு மாணவர்கள் கையெழுத்திட்டால் 4 லட்சம் வரையிலும், பெற்றோர் கையெழுத்திட்டால் 7.5 லட்சம் வரையிலும் கல்விக்கடன் வழங்கும் நிலை இருந்தது. தற்போது 20 லட்சம் வரை பிணையில்லாத கல்விக்கடன் வழங்கும் புரட்சிகரமான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு இது வெற்றிக் கொண்டாட்டமாக இருக்கும். காமராஜர் காலத்தில் மாணவர்களின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களைப் போன்று பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம்" என்றார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பேசிய அவர், "திமுக ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் மாநில அரசில் கூட்டணியில் இல்லை. மத்திய அரசில் மட்டுமே கூட்டணியில் இருந்தோம். அவர்கள் தேர்தல் வரையிலான ஒரு வரம்பை வைத்திருந்தனர். ஆனால் தற்போது எங்களுடைய அரசு முழுமையான அரசு, இந்த அரசு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கிய முதலமைச்சருக்கு திருத்தணியில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள காங்கிரஸ் இயக்கத் தோழர்கள் நன்றிக்கடன்பட்டவர்களாக இருக்கிறோம்.

எனக்கு சட்டமன்றத்தில் பணியாற்றி இன்னும் 100 நாட்களை கூட முழுமையாக கடக்கவில்லை. நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். சட்டமன்ற நடைமுறைகளை தற்போது கற்றுக் கொண்டு வருகிறேன். என்னுடன் இருக்கும் இளைஞர்கள் 35 வயதுடையவர்கள், அவர்களும் சட்டமன்ற நடைமுறைகளை கற்றுக்கொள்ள இன்னும் சிறிது காலம் தேவைப்படும். 100 நாட்களை கடந்த பிறகு சட்டமன்றம் மேலும் களைகட்டும். இன்னும் நாட்கள் செல்லச் செல்ல இந்த சட்டமன்றம் எப்படி களைகட்டப்போகிறது என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்" என தெரிவித்தார்.

முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், தனது உரையை கவிதை நடையில் ஆரம்பித்தார். சில நிமிடங்கள் இந்த பேச்சு நீடித்த நிலையில், உடனடியாக எழுந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, "நீங்கள் (அமைச்சர் விஸ்வநாதன்) எவ்வளவு பெரிய கவிஞராக கூட இருக்கலாம். ஆனால் இப்படி ஒரே வார்த்தையை இரண்டு முறை கூறினால், அவை உறுப்பினர்கள் எல்லாம் எப்போது பேரவையில் இருந்து கிளம்புவது?" என்று கோபமாக கேள்வி எழுப்பினார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.