📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 02, 2026 04:04 PM

கேலாங் விபத்தில் மாது மரணம்: ஆடவர்மீது குற்றச்சாட்டு

கேலாங் விபத்தில் மாது மரணம்: ஆடவர்மீது குற்றச்சாட்டு

2025 ஜூலையில், கேலாங் இரவுச் சந்தைக் கடைக்குள் வாடகை காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று பெண் ஒருவர் உயிரிழக்கக் காரணமான 41 வயது முகம்மது ஷஃபிக் ரசாலிமீது புதன்கிழமை (செப்டம்பர் 2) நீதிமன்றத்தில் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் ஓட்டியது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியது, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ளன.

மேலும், காப்புறுதிச் சான்றின்றி வாகனத்தைப் பயன்படுத்தியது, விபத்துக்குப் பிறகு வாகனத்தை நிறுத்தாமல் விவரங்களை வழங்கத் தவறியது, விபத்துக்குப் பின் உதவி வழங்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 முதல் 16 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் 20 முதல் 23 ஆண்டுகள் வரை வாகனம் ஓட்டத் தடை உத்தரவும் கோரத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க வழக்கஞர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது பிணைத் தொகையை $100,000ஆக நிர்ணயிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

கூண்டில் நின்றிருந்த ஷஃபிக், பிணைத் தொகையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். அவரது பிணையாளரால் அந்தத் தொகையைச் செலுத்த முடியாததால், அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த நீதிமன்ற விசாரணை வரை அவர் காவலில் வைக்கப்படுவார்.

2025 ஜூலை 11ஆம் தேதி, பிபிட் சாலைக்கு அருகே வாகன நிறுத்துமிடத் தடுப்பை உடைத்துக்கொண்டு, மெர்பாத்தி சாலை, அல்ஜுனிட் சாலை வழியே காரை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்ற ஷஃபிக், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து அதை மேலும் வேகமாகச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் ‘எட்டோமிடேட்’ போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்தில் 67 வயது மாது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.