📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema November 26, 2026 10:03 PM

கல்வித்துறையில் ஊழல் நடப்பதை பார்த்து எப்படி சும்மா இருக்க முடியும்: முதல்வர் விஜய்

கல்வித்துறையில் ஊழல் நடப்பதை பார்த்து எப்படி சும்மா இருக்க முடியும்: முதல்வர் விஜய்

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடம் பெறும் மாணவ, மாணவியருக்கு, த.வெ.க., சார்பில் ஆண்டுதோறும், கல்வி விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான முதல்கட்ட விருது வழங்கும் விழா, 4ம் தேதி நடந்தது.

2ம் கட்டமாக நடந்த விழாவில் முதல்வர் விஜய் பேசியதாவது: உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும். சில பேர் இதனை அரசியலாக்க முயற்சி செய்வர். அதை பற்றி கவலையில்லை. உங்களிடம் சொல்லியாக வேண்டும். இது மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். வாழ்க்கையில் எங்கு எல்லாம் உஷாராக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வதற்காக சொல்கிறேன்.

ஊழல். இது பழைய விஷயம். மக்கள் பழகிவிட்டார்கள் என நினைத்து கடந்து செல்ல முடியாது. இது நீண்ட கால நோய் போன்றது. அதனை குணப்படுத்துவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்தே ஆக வேண்டும். இதெயெல்லாம் குணப்படுத்த முடியுமா என சிலர் கேட்கலாம். ஆனால் அதனை கட்டுப்படுத்தலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கலாம். அப்படி நான் எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக, சிலரின் அடித்தளம் மாறிவிட்டது.

சமீப நாட்களாக நடந்த ஊழல் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். செய்திகளில் பார்த்து இருப்பீர்கள். மற்ற துறைகளில் எதாவது தவறு நடந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். நீதிமன்றம் விசாரிக்கும். ஆனால், கல்வித்துறையில் கல்வியில் ஊழல் நடந்தால் அதை பார்த்து எப்படி சும்மா இருக்க முடியும். மற்ற துறைகளில் தவறு நடந்தால் பரவாயில்லையா என சில அறிஞர்கள் கேட்பார்கள். எல்லா துறையும் முக்கியம் தான். எல்லா துறையும் நமது துறை தான். எந்த துறையில் தவறு நடந்தாலும் தவறு தான்.

ஆனால், கல்வித்துறையில் அனைத்துக்கும் அடித்தளம். நமது குழந்தைகளுக்கு எல்லாவற்றையும்விட அதுவே முக்கியம்தானே. எதிர்கால தலைமுறையினரே அவர்கள் தான்.

பள்ளி பாதுகாப்பில் சும்மா விளையாடி உள்ளனர். அதில் வந்த விஷயம் தான் கும்பகோணம் பள்ளி விஷயம். இப்போது நினைத்தாலும் பதறுகிறது. அதை தான் இவர்களும் பின்பற்றி உள்ளனர். அதே பள்ளி பாதுகாப்பு, ஊழல். எப்படி பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியும்.

அப்போது கூட எனது மேஜையில் மூன்று கோப்புகள் இருக்கிறது என்று தான் சொன்னேன். உடனே எதிர்க்கட்சியில் இருந்து சவுண்ட். 'அது என்ன திறங்களேன். திறந்து தான் பாருங்களேன்.' என்றனர்.

நானே சட்டசபையில் கையை கட்டிக் கொண்டு அமைதியாக அமர்ந்துள்ளேன். அவர்களே ஆசையாக கேட்கின்றனர். வேறு என்ன செய்ய முடியும். திறக்க வேண்டும்.

அதுவும் இல்லாமல் குழந்தைகள் படிக்கும் நூலக புத்தகங்களிலும் கூட ஊழல். நானும் சரி ஏஐ தொழில்நுட்பம் வந்துவிட்டது. பயங்கர முன்னேற்றம் வந்துள்ளது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை பார்க்கப் போகிறோம் என்று ஆசையாக எதிர்பார்ப்போடு இருந்தால்... ஏஐ வைத்துக் கொண்டு, ஆரம்ப காலங்களில் ஊழல் செய்துள்ளனர் என்றால் அவர்களை எங்கு வைக்கிறது என்ன செய்வது என தெரியவில்லை.

கோவையில் ஈவெரா பெயரில் உள்ள அறிவுலகம் திருச்சி காமராஜர் அறிவுலகம், நெல்லை காயிதே மில்லத் அறிவுலகம் ,சேலம் பாரதிதாசன் அறிவுலகம், கடலூர் அஞ்சலையம்மாள் அறிவுலகம், இதெல்லாம் மாணவர்கள் படிப்பதற்கு என இருக்கும் நூலகம். கோவையில் உள்ள அறிவுலகத்தில் முறைகேடு நடந்தது என வெளியே வருகிறது. மற்ற அறிவுலகங்களில் என்ன நடந்திருக்கிறதோ. ஒவ்வொன்றாக வெளியே வரும். இது அறிவுலகமா அல்லது ஊழல் உலகமா என தெரியவில்லை.

நான் சும்மா சொல்லவில்லை. 'நான் அரசியலுக்கு வந்தது ஒவ்வொரு குடும்பத்துக்காகவும், அதில் உள்ள மாணவர்கள் குழந்தைகள், எதிர்கால தலைமுறையினருக்காக வந்துள்ளேன்' என சும்மா சொல்லவில்லை.

அப்படிப்பட்ட உங்களின் வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு நடந்தால் பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும். உங்களை எப்பவுமே நல்ல வழியில் மட்டும்தான் நடத்தி கூட்டிப்போவேன். இவ்வாறு விஜய் பேசினார்.

தவெக சார்பில் நடந்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நிகழ்ச்சி தினமலர் இணையதளம் மற்றும் யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது.

இதனை பார்க்க:

https://www.youtube.com/watch?v=BHfbuDozMC0