📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 23, 2026 08:04 PM

கங்குலி பாணியில் சட்டையை சுழற்றி கொண்டாடிய இந்திய மாற்றுத்திறனாளி வீரர்கள்.. லார்ட்ஸ் மைதான வெற்றி

கங்குலி பாணியில் சட்டையை சுழற்றி கொண்டாடிய இந்திய மாற்றுத்திறனாளி வீரர்கள்.. லார்ட்ஸ் மைதான வெற்றி

கங்குலி பாணியில் சட்டையை சுழற்றி கொண்டாடிய இந்திய மாற்றுத்திறனாளி வீரர்கள்.. லார்ட்ஸ் மைதான வெற்றி

லண்டன்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கலப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான 7வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த அபார வெற்றிக்குப் பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் பால்கனியில் நின்றபடி வீரர்கள் தங்களது சட்டைகளை கழற்றி சுழற்றி, சவுரவ் கங்குலியின் வரலாற்று வெற்றிக் கொண்டாட்டத்தை மீண்டும் அரங்கேற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. அர்ஜுன் கவ்ரே 44 பந்துகளில் 68 ரன்கள் விளாசி வலுவான அடித்தளம் அமைத்தார். பின்னர் வந்த கேப்டன் மஜித் மக்ரே மலைக்க வைக்கும் அதிரடி ஆட்டம் விளையாடி வெறும் 19 பந்துகளில் 63 ரன்கள் குவித்து அசத்தினார்.

தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 88 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா தரப்பில் ஹிலால் அகமது வானி 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், ஜெயேஷ் பார்மர் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதன்மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இந்திய வீரர்கள், லார்ட்ஸ் பெவிலியன் பால்கனியில் கூடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2002 ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு, அன்றைய இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி இதே பால்கனியில் தனது ஜெர்சியை கழற்றி கொண்டாடினார். அதை நினைவுபடுத்தும் வகையில் 24 ஆண்டுகள் கழித்து இந்திய மாற்றுத்திறனாளி வீரர்கள் அதே பால்கனியில் தங்களது கோட் மற்றும் சட்டைகளை காற்றில் சுழற்றி வெற்றி முழக்கமிட்டது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த 7 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 4-3 என்ற கணக்கில் கைப்பற்றிய போதிலும், கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பதிவு செய்த இந்த வரலாற்று வெற்றி இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டின் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.