📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 24, 2026 03:04 AM

ரியால் மட்ரிட் இளையர் காற்பந்து அணியுடன் களமிறங்கும் சிண்டாவின் இளம் வீரர்கள்

ரியால் மட்ரிட் இளையர் காற்பந்து அணியுடன் களமிறங்கும் சிண்டாவின் இளம் வீரர்கள்

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கக் (சிண்டா) காற்பந்துக் கழகத்தின் 16 வயதுக்குட்பட்ட ஆடவர் அணி, சிங்கப்பூரின் ரியால் மட்ரிட் அணியின் 16 வயதுக்குட்பட்ட ஆடவர் அணியுடன் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நட்புமுறை ஆட்டத்தில் களமிறங்கியது.

செயின்ட் ஜோசஃப் அனைத்துலகக் கல்வி நிலையத் திடலில் நடைபெற்ற அந்த ஆட்டதுக்கு முன்னதாக, இரு அணிகளையும் சேர்ந்த இளம் காற்பந்து வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் பங்கெடுத்தனர்.

அந்தப் பயிற்சி, இரு அணிகளையும் சேர்ந்த இளம் வீரர்கள் ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்ளவும் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் நடத்தப்பட்டது. வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் ஒருவருடன் மற்றவர் பழகி, புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் அது வழிவகுத்தது.

இத்தகைய விளையாட்டுப் பரிமாற்றங்கள், இளம் வீரர்களின் காற்பந்துத் திறனை வளர்ப்பதுடன் விளையாட்டின் மூலம் ஒழுக்கம், குழு உணர்வு, மரியாதை, புரிந்துணர்வு போன்றவற்றை மேம்படுத்தவும் உதவுகின்றன.

“இன்றைய போட்டி மிகவும் உற்சாகமாக இருந்தது. நாங்கள் நிறையக் கற்றுக்கொண்டோம். மற்ற அணிகளுடன் இன்னும் அதிகமாக விளையாட விரும்புகிறேன்,” என்று இயோ சூ காங் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது பிரேமியோ யசோதன் கூறினார்.

ஐந்து பேர், 11 பேர் கொண்ட இரு பிரிவுகளில் அணிகள் மோதின. இரண்டு போட்டிகளிலும் சிண்டா அணி வெற்றி பெற்றது.

“நாங்கள் ஓரணியாக இணைந்து செயல்பட்டதால்தான் இந்தப் போட்டிகளில் நன்றாக விளையாடினோம். நாங்கள் கற்றுக்கொண்ட நல்ல அம்சங்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் பல கிண்ணங்களை வெல்ல விரும்புகிறோம்,” என்று சிண்டா காற்பந்து அணித் தலைவரான சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளியின் 14 வயது சஷ்வின் ஜெயர் கூறினார்.

“சிங்கப்பூரின் ரியால் மட்ரிட் அறநிறுவனக் காற்பந்து பள்ளி, காற்பந்து என்பது ஒரு விளையாட்டைவிட மேலானது என்று நம்புகிறது; அது கற்பித்தல் ஊக்கமளித்தலோடு சமுதாயங்களை ஒன்றிணைக்கவும் உதவக்கூடியது. சிண்டா போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது, இளம் வீரர்கள் காற்பந்துத் திறன்களை மட்டுமல்லாமல் ஒழுக்கம், தன்னம்பிக்கை போன்ற முக்கிய நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் துணைபுரிகிறது ,” என்று சிங்கப்பூரின் ரியால் மட்ரிட் அறநிறுவனக் காற்பந்துத் தனிமனித வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஹுவான் ஹோசே வெரெலா கூறினார்.