📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 06, 2026 01:03 AM

கண்ணன் குழலோசை... களைகட்டிய கோவில்கள்

கண்ணன் குழலோசை... களைகட்டிய கோவில்கள்

திருப்பூர்:திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா பல்வேறு கோவில்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகளால் கோவில் வளாகங்கள் களைகட்டின.

* திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் வீரராகவப்பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று நடந்த விழாவில், கிருஷ்ணர் மற்றும் ராதை போல் அலங்கரிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பங்கேற்றனர்.

தொடர்ந்து, திருப்பூர் கவிநயா நாட்டிய பள்ளி குழந்தைகள் பங்கேற்ற, 'எங்கெங்கு நோக்கினும் கண்ணனே' நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி திருவீதியுலா, உறியடி உற்சவம் மற்றும் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சிகளும் நடந்தன.

* ஊத்துக்குளி ரோடு குருவாயூரப்பன் கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில், உறியடி உற்சவம் நடைபெற்றது. ஏராளமான உறி பானைகள் கட்டப்பட்டு, கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகள் பங்கேற்றனர். சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.

* ராயபுரம் கிருஷ்ணர் கோவிலில், நிறைவு நாளான நேற்று வேணுகோபால கிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

* பாளையக்காடு வடக்கு, ராஜ்மாதா நகரில் உள்ள ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணர் கோவிலில், 40ம் ஆண்டு உறியடி உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் சீர்வரிசை எடுத்து வருதல், கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான போட்டிகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நேற்று சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து, செண்டை மேள வாத்தியத்துடன் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணர் மற்றும் உறி ஊர்வலம் நடந்தது. பின்னர் உரியடி உற்சவம், அன்னதானம் நடைபெற்றது. கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகள் விழாவில் உற்சாகமாக பங்கேற்றனர்.

* சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்த நிலையில், ராதை--கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகளின் கோலாட்டம் பக்தர்களை கவர்ந்தது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிறப்பு அலங்காரத்தில் ராஜ்மாதா நகர், ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணர்; கிருஷ்ணர், ராதை வேடத்தில் சிறுவர், சிறுமியர்.

திருப்பூர், வீரராகவப்பெருமாள் கோவிலில் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில், கிருஷ்ணர், ராதையராக காட்சிதந்த குட்டீஸ். கவிநயா நாட்டியப்பள்ளி சார்பில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி. உறியடி நிகழ்ச்சி நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் வீரராகவப்பெருமாள்.

சிறப்பு அலங்காரத்தில், சேவூர், கல்யாண வெங்கட்ரமணப் பெருமாள்.