📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news June 09, 2026 11:00 AM

 கணவரை துண்டு துண்டாக வெட்டி வீடியோ எடுத்து ரசித்த மனைவி; போலீசில் பகீர் வாக்குமூலம்; கள்ளக்காதலனும் கைது

 கணவரை துண்டு துண்டாக வெட்டி வீடியோ எடுத்து ரசித்த மனைவி; போலீசில் பகீர் வாக்குமூலம்; கள்ளக்காதலனும் கைது

சென்னை: 'தினமும் அடித்து சித்ரவதை செய்ததுடன், பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததால், கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசினேன்' என, கைதான அவரது மனைவி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். கணவரை துண்டு துண்டாக வெட்டிய காட்சிகளை, வீடியோ எடுத்து அவர் ரசித்ததும் தெரிய வந்துள்ளது.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில், கடந்த 5ம் தேதி கேட்பாரற்று கிடந்த சூட்கேசில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இச்சடலத்தில், முழங்கைகள் மற்றும் முழங்கால்கள் வரையும் துண்டிக்கப்பட்டு இருந்தன.

இந்த வழக்கு, பெரம்பூர் ரயில்வே போலீசாரிடம் இருந்து சென்னை போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஓட்டேரி போலீசார் கொலை வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கொல்லப்பட்ட நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி, 35, என கண்டறிந்தனர்.

கொலை குறித்து, தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஹீமா கதுான், 30, அவரது கள்ளக்காதலன், அஸ்ரப் அலி, 36, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

போலீசாரிடம் ரஹீமா கதுான் அளித்துள்ள வாக்குமூலம்: நான் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவள். எனக்கு எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்கனவே திருமணமாகி விட்டது. கருத்து வேறுபாடால் கணவரை பிரிந்து விட்டேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். எங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தேனாம்பேட்டையில் தங்கி இருப்பதால், நாங்களும் அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தோம்.

புற்றுநோய் சிகிச்சைக்காக, வெளிநாடுகளில் இருந்து சென்னை வருவோருக்கு தங்கும் இடத்தை ஏற்பாடு செய்வது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட உதவிகளை செய்யும் புரோக்கர்கள் போல செயல்பட்டோம். நல்ல வருமானம் கிடைத்தது.

அமீர் அலிக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. பெண்களை அழைத்து வந்து என் கண்முன் உல்லாசம் அனுபவிக்க துவங்கினார். இதை கண்டித்ததால் தினமும் என்னை அடித்து சித்ரவதை செய்தார்.

என் முதல் கணவருக்கும், எனக்கும் இருந்த தாம்பத்திய உறவு குறித்து கொச்சைப்படுத்தினார். என் நடத்தை குறித்தும் அவதுாறாக பேசி வந்தார்.

இதுபற்றி, தேனாம்பேட்டையில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வரும், எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்ரப் அலியிடம் தெரிவித்து வந்தேன். அவர் எனக்கு ஆறுதலாக இருந்தார். எங்கள் நட்பு கள்ளக்காதலாக மாறியது.

வீட்டில் கணவர் இல்லாதபோது உல்லாசம் அனுபவித்து வந்தோம். கணவரிடம் இருந்து பிரிந்து, தன்னுடன் வந்துவிடுமாறு அஸ்ரப் அலி கூறினார். கள்ளக்காதல் விவகாரம் தெரிந்துவிட்டால், கணவர் அமீர் அலி எங்களை தீர்த்து கட்டிவிடுவார். இதனால், இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.

கடந்த, 2ம் தேதி வீட்டிற்கு அமீர் அலி வந்ததும், அவருடன் இரவு முழுதும் நெருக்கமாக இருக்கலாம் என, ஆசை காட்டினேன். அவரும் அதற்காக தயாராகி வந்தார்.

அப்போது, பாலில் ஏழு துாக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தேன். நன்றாக மயங்கியவுடன், கள்ளக்காதலன் அஸ்ரப் அலியை வீட்டிற்கு அழைத்தேன். அப்போது, இருவரும் கத்தியால் அமீர் அலியின் கழுத்தில் மாறி மாறி வெட்டினோம்; உயிர் பிரிந்தது.

அதன்பின், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால், கை, கால்களில் இருந்த தசைகளை நீக்கினோம். தலையை துண்டித்து எடுத்து விட்டோம். கைகள் மற்றும் கால்களில் முழங்கால் வரை வெட்டி எடுத்தோம். தலை இல்லாத உடலை சூட்கேசில் அடைத்தோம்.

மற்ற உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றி, எங்கள் வீட்டிற்கு அருகே உள்ள பகிங்ஹாம் கால்வாயில் புதைத்து விட்டோம். தலையில்லா உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்று, பெரம்பூர் ரயில் நிலையத்தில் போட்டுவிட்டு தப்பினோம்.

தலையை, செங்கல்பட்டுக்கு ரயிலில் எடுத்துச் சென்று, ரயில் நிலையம் அருகே உள்ள கொளவாய் ஏரியில் பிளாஸ்டிக் கவரில் சுற்றி புதைத்துவிட்டோம்.

அமீர் அலியை கொலை செய்ததை, மொபைல் போனில் வீடியோ எடுத்தேன். என்னை சித்ரவதை செய்ததற்கான ஆத்திரத்தை போக்கும் வகையில், பல முறை அந்த வீடியோவை பார்த்து ரசித்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: அமீர் அலி கொலை குறித்து தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். அமீர் அலி, டிரவுசர் அணிந்து இருந்தார். அதில், 'பார்கோடு' இருந்தது. அதன் வாயிலாக, அந்த டிரவுசர் சென்னை கொளத்துாரில் உள்ள கடை ஒன்றில் வாங்கியதை கண்டறிந்தோம். அந்த கடைக்குச் சென்று, டிரவுசர் வாங்கிய நபர்களின் மொபைல் போனை கடைக்காரரிடம் வாங்கினோம். அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய நபர் திடீரென, 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டார். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், அந்த மொபைல் போன் எண்ணிற்குரிய, 'வாட்ஸாப்'பில், பெண் ஒருவரின் படம் இருந்தது. அந்த எண்களில் இருந்து அடிக்கடி வாட்ஸாப் அழைப்பில் மட்டுமே பேசப்பட்டு இருந்தது. அந்த மொபைல் போன் எண்களின் டவர் லொகேஷன், தேனாம்பேட்டை மற்றும் தி.நகர் உள்ளிட்ட பகுதிகளை காட்டியது. இதனால், அப்பகுதிகளில் ரகசிய விசாரணை நடத்தினோம். இதற்கிடையே, மற்றொரு தனிப்படை போலீசார், அமீர் அலியின் உடல் அடைக்கப்பட்டு இருந்த சூட்கேசில், தரமணியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பயன்படுத்தும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிற உறை ஒன்று கிடந்தது. தி.நகர் சரவணா ஸ்டோர் பைகளும் இருந்தன. இதனால், அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று, அத்தகைய சிவப்பு மற்றும் மஞ்சள் உறையை கையாளும் ஊழியர்களிடம் விசாரித்தோம். மேலும், அம்மருத்துவமனையைச் சுற்றி இருந்த, 100க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது, சந்தேகத்திற்கிடமான ஆட்டோ ஒன்று பெரம்பூர் ரயில் நிலையம் நோக்கிச் சென்றது தெரியவந்தது. 'ரேபிடோ, ஓலா, ஊபர்' வாயிலாக, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முன்பதிவு செய்து, பெரம்பூர் சென்றவர்களின் விபரத்தை சேகரித்தோம். அப்போது, நாங்கள் ஏற்கனவே சந்தேகப்பட்ட ஆட்டோவில், ஒரு பெண்ணும், ஒரு ஆணும் முன்பதிவு செய்து, தேனாம்பேட்டை தாமஸ் சாலைக்கு சென்று, அங்கிருந்து பெரம்பூர் ரயில் நிலையம் சென்றது தெரிந்தது. அந்த ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்தபோது தான், ரஹீமா கதுான் மற்றும் அஸ்ரப் அலி குறித்து தகவல்கள் கொடுத்தார். அதன் அடிப்படையில் இருவரையும் சுற்றி வளைத்தோம். இதற்கிடையே, ரஹீமா கதுான் புற்று நோயாளிகளுக்கு உதவி செய்யும் புரோக்கர் என்ற தகவலும் கிடைத்தது. பெண் ஒருவரை நோயாளி போல நடிக்க வைத்து, அவர் வாயிலாக, ரஹீமா கதுான் மற்றும் அஸ்ரப் அலி ஆகியோரை கைது செய்தோம். கொல்லப்பட்ட அமீர் அலியின் தலை செங்கல்பட்டில் மீட்கப்பட்டது. இதர பாகங்களையும் மீட்டுள்ளோம். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.