📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 31, 2026 06:02 PM

உஸ்பெக் மொழியில் திருக்குறள்: மோடியின் வேண்டுகோள்

உஸ்பெக் மொழியில் திருக்குறள்: மோடியின் வேண்டுகோள்

தாஷ்கண்ட்: திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய அவர், தமிழின் மிகச்சிறந்த வாழ்வியல் நூலான திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்குமாறு அப்பல்கலைக்கழகத்தைக் கேட்டுக்கொண்டார்.

அரிய தமிழ்ப் படைப்போடு உஸ்பெகிஸ்தான் மக்கள் ஆழமான பிணைப்பை உணர இது நல்வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாஷ்கன்ட் பல்கலைக்கழகத்தின் 80வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.

அப்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இயற்றப்பட்ட திருக்குறள் ஆன்மிகம், தத்துவம், வாழ்க்கைக்கான ஆழ்ந்த ஞானத்தைக் கொண்ட ஒரு மகத்தான படைப்பு என்று புகழாரம் சூட்டினார்.

“மனித வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் நல்வழி காட்டக்கூடிய இந்த நூல், உலகளவில் தொடர்ந்து பலருக்கும் பெரும் உத்வேகத்தை அளித்து வருகிறது,” என்றார் திரு மோடி.

பல்கலைக்கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 80வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கும் புதிய முயற்சியை மேற்கொள்வது அங்குள்ள அறிவுச் செல்வத்தை மேலும் செழுமைப்படுத்தும் என மோடி குறிப்பிட்டார்.