📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 10, 2026 07:33 AM

கோவையில் 40 நாளில் 12 கொலைகள்! பின்னணியில் உளவியல் பிரச்னை, அற்ப காரணங்கள்

கோவையில் 40 நாளில் 12 கொலைகள்! பின்னணியில் உளவியல் பிரச்னை, அற்ப காரணங்கள்

கோவை: கோவையில் சமீபத்தில் நடந்த பல கொலை சம்பவங்கள், சாதாரண தகராறுகள் எதிர்பாராதவிதமாக கொலையில் முடியும் அதிர்ச்சி பின்னணியை வெளிப்படுத்துகின்றன.

கோவையில் கடந்த ஆக., 1 முதல் தற்போது வரை நடந்துள்ள 12 கொலை சம்பவங்களில் பெரும்பாலானவற்றை உற்று நோக்கினால், அவை முன்கூட்டியே திட்டமிட்டு நடந்தவை அல்ல.

நீலாம்பூரில் பணம் தொடர்பான தகராறு மதுபோதையில் தாக்குதலாக மாறி ஒருவர் உயிரிழந்தார். ஒத்தக்கால்மண்டபத்தில் கல்லுாரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு ஒரு மாணவரின் உயிரைப் பறித்தது. கிணத்துக்கடவில் நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 17 வயது சிறுவன் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். பொள்ளாச்சியில் சமையல் தொடர்பான கணவன் - மனைவி வாக்குவாதம் தாக்குதலாக மாறி மனைவி உயிரிழந்தார்.

காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், இச்சம்பவங்களை இணைக்கும் பொதுவான அம்சம் ஒன்று உள்ளது. கொலை செய்யும் நோக்கத்தில் துவங்காத தகராறு, கோபத்தை கட்டுப்படுத்த முடியாததால் கொலையாக மாறியுள்ளது.

பல சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தொழில்முறை குற்றவாளிகள் அல்ல. மாணவர்கள், இளைஞர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்களே, ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கட்டுப்பாட்டை இழந்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்களை சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. திட்டமிட்டு நடைபெறும் குற்றங்களை போலீசார் கண்காணிக்க முடியும். ஆனால், வீட்டுக்குள், நண்பர்களிடையே அல்லது சாலையில் திடீரென ஏற்படும் வாக்குவாதங்களை முன்கூட்டியே தடுக்க முடியாது. எனவே, போலீஸ் நடவடிக்கை மட்டும் இதற்கு தீர்வாக இருக்க முடியாது.

உளவியல் நிபுணர் பிரதீபா கூறியதாவது: கோபம் ஏற்படுவது இயல்பான மனித உணர்வு. ஆனால், கோபத்தை கையாளத் தெரியாமல் உடனடியாக செயல்படுவதுதான் பிரச்னை. குறிப்பாக இளைஞர்களிடம், அவமானப்படுத்தப்பட்டால் உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்ற மனநிலை காணப்படுகிறது. மதுபோதையில் சுயக்கட்டுப்பாடு குறைவதால், சாதாரணமாக தவிர்க்கக்கூடிய பிரச்னைகளும் வன்முறையாக மாறுகின்றன. பள்ளி, கல்லுாரி பருவத்திலேயே கோப மேலாண்மை மற்றும் பிரச்னைகளை வன்முறையின்றி தீர்க்கும் திறன்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.

கோபம் வரும்போது உடனடியாக பதிலளிக்காமல் சில நிமிடங்கள் விலகி நிற்பது அல்லது அந்த இடத்தை விட்டு செல்வது போன்ற சிறிய செயல்கள்கூட பெரிய விபரீதங்களைத் தடுக்க முடியும். கோபம் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கலாம்; ஆனால், அந்த கோபத்தில் செய்யப்படும் ஒரு செயல் வாழ்நாள் முழுவதும் விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார்.