திடீர் வெள்ள அபாயம்: ஜூரோங் வெஸ்ட், பைனியர் வட்டாரங்களைத் தவிர்க்க அறிவுறுத்து
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) காலை வேளையில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் இரண்டு இடங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி), தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ஜாலான் பூன் லே (இன்டர்நேஷனல் சாலையிலிருந்து என்டர்பிரைஸ் சாலை வரை) பகுதிக்கு காலை 8.26 மணி முதல் ஒரு மணி நேரத்துக்குச் செல்லவேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்துள்ளது.
மேலும், கனமழை காரணமாகச் பெசாவாட் டிரைவ், ஜூரோங் போர்ட் சாலை சந்திப்பையும் காலை 8.29 மணி முதல் ஒரு மணி நேரத்துக்குத் தவிர்க்குமாறு வாகன ஓட்டுநர்களுக்கு அது அறிவுறுத்தியுள்ளது.
தீவின் பல பகுதிகளில் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, செப்டம்பர் 1ஆம் தேதியன்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இருவார வானிலை முன்னுரைப்பில், இம்மாதத்தின் முதல் பாதியில் சில நாள்களில் காலை வேளையிலும் பிற்பகலிலும் தீவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, செப்டம்பர் முதல் வாரத்தில் பெரும்பாலான நாள்களில் காற்றுடன் கூடிய சீரான வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.