கொரோனா பரவுகிறது என கூறி பெண்களை மொட்டை அடிக்க வைத்த ஆசாமி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியை சேர்ந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய நபர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தாம் பேசுவதாகவும், கொரோனா பரவி வரும் நிலையில் அதை தடுக்க மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் எனகூறியுள்ளார்.
மொட்டை அடித்தால் ஆண்களுக்கு 6,000 ரூபாயும், பெண்களுக்கு 15,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அந்த நபர் கூறியதாக சொல்லப்படுகிறது.
பெண்கள் சிலர் மொட்டை அடித்தது போன்ற படங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார் அவர். இதை நம்பி 20 பேர் மொட்டை அடிக்க தயாரான நிலையில், 3 பெண்கள் மொட்டையும் போட்டுள்ளனர். பின்னர் அந்த நபரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
இது தொடர்பாக மோசடி நபர் குறித்து போலீசாரிடம் பெண்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெண்களை மோசடி செய்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.