கர்நாடகாவில் தமிழர்கள் சுடப்பட்ட விவகாரம்
கர்நாடகாவில் தமிழர்கள் சுடப்பட்ட விவகாரம் - தமிழர் தேசிய நடுவம் சார்பாக நடைபெற்ற போராட்டம்
கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் வனத்துறை அதிகாரிகளால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன் தெரிவித்தார்.
Published : August 22, 2026 at 9:50 PM IST
மதுரை: மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து கர்நாடக முதல்வர் சிவக்குமார் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடைபெறும் என 'எங்கள் தமிழ்நாடு இயக்கம்' அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக, கர்நாடக மாநில அரசை கண்டித்து மதுரையில் தமிழர் தேசிய நடுவம் சார்பாக, பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கர்நாடகா அரசுக்கு எதிராகவும், மாநில முதல்வர் சிவக்குமாருக்கு எதிராகவும், கண்டனம் முழக்கம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தல் பங்கேற்ற தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் வனத்துறை அதிகாரிகளால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த படுகொலைகளை எதிர்த்து தமிழ்நாடு கண்டனம் தெரிவித்ததை கூட பொறுத்துக் கொள்ள முடியாமல், எங்கள் மாநில பிரச்சனைகளில் தலையிடக்கூடாது என்று ஆணவத்தோடு பேசிய கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமாரை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்தியா ஒரு நாடு, அந்த நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தில் நடைபெற்ற படுகொலைக்கு எதிராக கருத்துச் சொல்ல கூட தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை என்று கூறுவது ஆணவமான பேச்சாகும். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, கர்நாடகமும், தமிழ்நாடு இணைந்து தான் அவரை விடுவிப்பதற்காக ரூபாய் 100 கோடி வரை செலவு செய்தன. இது எங்கள் மாநிலத்தின் பிரச்சனை என்று கூறுவதன் மூலம் கர்நாடக முதல்வர் தமிழர்களின் படுகொலையை நியாயப்படுத்த நினைக்கிறார்.
இன்று, நேற்று அல்ல தொடர்ந்து, கர்நாடகத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த கோரியபோது, கர்நாடக மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் அடித்து துரத்தப்பட்டனர். அதேபோன்று கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதுபோன்று தமிழர்களை தொடர்ந்து வேட்டையாடுவதை கர்நாடகம் வழக்கமாகக் கொண்டுள்ளது. ஒருவேளை வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால், கர்நாடகா தமிழர்களை தொட்டு கூட பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு தமிழர்களையும் தமிழ்நாட்டையும் பாதுகாத்தவர் வீரப்பன். கர்நாடக மாநிலத்தின் இந்த செயலுக்கு தமிழர்கள் எதிர்வினை ஆற்ற வேண்டும்.
வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்ற இதே இடத்தில், 'எங்கள் தமிழ்நாடு இயக்கத்தின்' சார்பில் பல்வேறு மக்கள் இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெறும்" என்றார்.