கருணாநிதி நினைத்திருந்தால் கச்சத்தீவை இலங்கைக்கு தராமல் தடுத்திருக்கலாம்: சட்டசபையில் அமைச்சர்கள் குற்றச்சாட்டு
சென்னை: ''கருணாநிதி நினைத்திருந்தால், இலங்கைக்கு கச்சத்தீவை கொடுப்பதை தடுத்திருக்கலாம்,'' என, மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
தி.மு.க., -காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்: இலங்கை கடற்படையால், தொடர்ந்து பல்வேறு இன்னல்களை தமிழக மீனவர்கள் சந்தித்து வருகின்றனர்.
அமைச்சர் ஆனந்த்: கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததே தி.மு.க., தானே?
தி.மு.க., - வேலு: உங்கள் கூட்டணியில் இருக்கும், காங்கிரஸ் கட்சியால் தான் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது. அதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, தி.மு.க., சார்பில், போராட்டமும் நடத்தப்பட்டது.
அமைச்சர் நிர்மல்குமார்: கச்சத்தீவை, மத்திய அரசு தாரை வார்த்தபோது, அன்றைய தி.மு.க., அரசு அமைதி காத்தது. அன்றைய வெளியுறவு செயலர், இரு முறை ஆலோசனை நடத்தினார். கருணாநிதி ஒப்புதலில் தான், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. அவர் நினைத்திருந்தால், தடுத்திருக்க முடியும். வழக்குகளுக்கு பணிந்து ஒப்புக்கொண்டார். தற்போது நம் மீனவர்கள் கஷ்டப்படுகின்றனர்.
அ.தி.மு.க., - தளவாய் சுந்தரம்: கச்சத்தீவு தொடர்பாக, 2008ல், உச்சநீதிமன்றத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். அதற்கு மத்திய அரசு பதிலளித்தது. ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க., அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. கச்சத்தீவு விவகாரத்தில், தி.மு.க., ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது.
அமைச்சர் நிர்மல்குமார்: கச்சத்தீவு குறித்து, மத்திய அரசு பேசியபோதே, மக்களிடம், அப்போதைய முதல்வர் கருணாநிதி தெரிவித்து இருக்க வேண்டும். அது, அவரது தனிப்பட்ட விவகாரம் கிடையாது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கலாம். அத்தகைய வாய்ப்புகளை தவறவிட்டு, எல்லாம் முடிந்த பின், தீர்மானம் நிறைவேற்றுவதில் பயனில்லை.
காங்கிரஸ் - தாரகை கத்பட்: கச்சத்தீவு, 285 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதை வழங்கி விட்டு, 25 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட, 'வெட்ஜ் பேங்க்' வாங்கப்பட்டது. அதனால், பொருளாதார ரீதியாக, நமக்கு கிடைத்த பயனை யாரும் பேசுவதில்லை.
தி.மு.க., - கோவி செழியன்: அமைச்சர்கள் எதையாவது பேசி, 'ரீல்ஸ்' போடுவதற்கு சாதகமாக்கி கொள்கின்றனர்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.