📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 04, 2026 04:01 PM

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பணி நியமன அரசாணை ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பணி நியமன அரசாணை ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

- நமது நிருபர் -

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட, அரசு பணிக்கான நியமன அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மேலும் இரண்டு மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில், கடந்த ஆண்டு செப்.,27ல் த.வெ.க., தலைவரும், தற்போதைய முதல்வருமான விஜய் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கரூரில் கடந்த மாதம் 10ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், கருணை அடிப்படையில் அரசு பணிக்கான அரசாணையை, முதல்வர் விஜய் வழங்கினார்.

அரசு பணி வழங்கும் அரசின் முடிவுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு, 'அரசு பணிகளை, அரசின் கொடையாகவோ அல்லது ஒரு துயர சம்பவத்துக்கு பிந்தைய கருணை நிவாரணமாகவோ வழங்க முடியாது' என தெரிவித்து, பணி நியமன ஆணைகளை ரத்து செய்தது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், 'அரசு பணி ஆணை வழங்கியது, மாநில அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்ட நடவடிக்கை. அதில் நீதிமன்றம் குறுக்கிட முகாந்திரம் இல்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, தங்கள் தரப்பை கேட்காமல், எவ்வித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த மனுதாரர் தரப்பில், கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, பிரபாகரன் செல்வகுமார், பி. ஆனந்த ஜோதி ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில், தனித்தனியாக மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து, புதிதாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களும், விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.