'குதிரை பேர' வழக்கு விசாரணைக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: த.வெ.க., - எம்.எல்.ஏ.,விடம் குதிரை பேரம் நடத்தியதாக, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு, வரும் 27ம் தேதி வரை தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி, த.வெ.க., -- எம்.எல்.ஏ., இளையராஜா, 'என்னிடம் தொலைபேசியில் பேசிய சிலர், கட்சி மாறி ஓட்டளிக்க, 35 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசினர்' என, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில், தேர்தல் கருத்து கணிப்பு நிறுவனம் நடத்தி வந்த திருநாவுக்கரசு உட்பட, 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சேதுராஜ், கார்த்திக் ஆகியோர், குதிரை பேர வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, 'குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒவ்வொருவராக, சி.பி.ஐ., விசார ணை கோரி, மனு தாக்கல் செய்து வருவதால், வரும் 27ம் தேதி வரை, 'குதிரை பேரம்' தொடர்பாக, திருவல்லிக்கேணி போலீசாரால் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கிறோம்' என உத்தரவிட்டு, மனுவுக்கு, தமிழக அரசு, சி.பி.ஐ., பதிலளிக்க வேண்டும் என தெரிவித்து, விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதற்கிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, திருநாவுக்கரசு, தியாகராஜன், ராஜேஷ், கணேசன், சீனிவாசன், செல்வம் ஆகியோர், ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதேபோல், இந்த வழக்கு தொடர்பாக தீபக், செல்வரங்க முருகன், அழகேசன், சக்திவேல் ஆகியோரும், முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கில் கைதான திருநாவுக்கரசு, தியாகராஜன் உள்ளிட்ட ஆறு பேருக்கு ஜாமின் வழங்கியும், தீபக் உள்ளிட்ட நான்கு பேருக்கு, முன் ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டார்.