குடிநீர்த் தட்டுப்பாடு: பாத்தாமில் தரவு நிலையங்களுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
பாத்தாம்: பாத்தாமில் உள்ள நோங்சா சிறப்புப் பொருளியல் மண்டல நிர்வாக அலுவலகத்தைச் சனிக்கிழமை (செப்டம்பர் 26) முற்றுகையிட்ட இல்லத்தரசிகள் உட்பட நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் குடிநீர் கேட்டு ஆர்ப்பரித்தனர்.
இப்பகுதியில் உள்ள மக்கள் கடந்த இரண்டு மாதங்களாகக் குடிநீருக்காகப் போராடி வருகின்றனர்.
நோங்சா சிறப்புப் பொருளியல் மண்டலத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் அந்த மண்டலத்திற்குள் உள்ள தரவு நிலையங்களுக்கு மட்டும் தண்ணீர் சீராகச் சென்று கொண்டிருப்பதாகக் குடியிருப்பாளர்கள் பொருமுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவும் காணொளி ஒன்றில் பேசிய போராட்டக்காரர் ஒருவர், “எங்கள் அடிப்படைச் சுகாதாரத் தேவைகளுக்குக்கூட இப்போது தண்ணீர் கிடைப்பதில்லை,” என்று ஆதங்கப்பட்டார்.
சிறப்புப் பொருளியல் மண்டல நிர்வாகமும் நகர நிர்வாகமும் குடிநீருக்காக எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காததைக் கடுமையாக விமர்சித்துள்ள மக்கள், நோங்சா சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டும் எப்படி தாராளமாகத் தண்ணீர் கிடைக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
நோங்சா மட்டுமன்றி, லுபுக் பாஜா மாவட்டத்தில் உள்ள பலோய் பாரடைஸ், ஆங்ரெக் பெர்மாய் குடியிருப்புப் பகுதிகளிலும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் குடிநீர் விநியோகம் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்துவிட்டதாலும் பின்னர் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை முற்றிலும் நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாத்தாமின் தாராள வர்த்தக வட்டார (பிபி பாத்தம்) ஆணையத்தின் வர்த்தக விவகாரங்களுக்கான துணைத் தலைவர் டென்னி டொன்டானோ, குடியிருப்புப் பகுதிகளுக்குத் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“நாங்கள் உடனடியாக நேரில் சென்று சோதனையிடவிருக்கிறோம்,” என்று திங்களன்று ‘த ஜகார்த்தா போஸ்ட்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய நோங்சா டிஜிட்டல் பார்க்கின் மனிதவள இயக்குநர் நாரா தேவா, குடிநீர் விநியோகம் சிறப்புப் பொருளியல் மண்டல நிர்வாகத்தின்கீழ் வரவில்லை என்றும் அது ‘பிபி பாத்தாம்’, நீர் விநியோக நிறுவனமான ‘பிடி ஏர் பாத்தாம் ஹிலிர்’ ஆகியவற்றின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் தெளிவுபடுத்தினார்.
“பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்குவது எங்கள் வேலையன்று, அந்தப் பொறுப்பு பாத்தாம் ஹிலிர், ஸ்பேம் என்ற குடிநீர் விநியோக அமைப்பையே சாரும்,” என்று அவர் கூறினார்.
இது, சிறப்புப் பொருளியல் மண்டல நிர்வாகத்தின் கடமையல்ல என்பதால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சிரமம், தரவு நிலையங்களுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் வெவ்வேறு ஆதாரங்களில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்று அவர் விளக்கினார்.
நோங்சா சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் உள்ள தரவு நிலையங்களுக்கு பிபி பாத்தாம் அமைத்துள்ள சிறப்புக் குழாய் மூலம் டுரியங்காங் நீர்த் தேக்கத்திலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
ஆனால், நோங்சா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கான தண்ணீர் நோங்சா நீர்த் தேக்கத்திலிருந்து விநியோகிக்கப்படுகிறது. இந்த நீர்த் தேக்கத்தில் தற்போது நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.
“நோங்சா நீர்த் தேக்கத்தில் தண்ணீர் குறைந்து வறண்டு போனதால் குடியிருப்பாளர்களுக்குப் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. இதனாலேயே தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் உணர்கின்றனர்,” என்று நாரா தேவா கூறினார்.