📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 02, 2026 10:04 PM

கூடுவாஞ்சேரி கொலை

கூடுவாஞ்சேரி கொலை

கூடுவாஞ்சேரி கொலை - சூட்கேஸை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து விட்டு தப்பியது எப்படி? நடித்துக் காட்டிய தம்பதி

கைதான இருவரும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸை எங்கு வைத்தனர் என்பதை போலீசாரிடம் நடித்துக் காட்டினர்.

Published : September 2, 2026 at 7:44 PM IST

சென்னை: கூடுவாஞ்சேரி அருகே பெண்ணைக் கொலை செய்து, உடல் பாகங்களை சூட்கேஸில் அடைத்து ரயிலில் அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதியினர், கொலை செய்துவிட்டு தப்பியது எப்படி என்பது குறித்து போலீசாரிடம் நடித்துக் காண்பித்தனர்.

ஒடிசாவை சேர்ந்த ஹைத்துல் நிஷா என்பவர், தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் காணாமல் போனதாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, சென்னையில் இருந்து சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றபோது, அதில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சூட்கேஸில் சுற்றப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர், சென்னையை சேர்ந்த ஜவுளிக் கடையில் வாங்கியது என்பதால், அதனடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சென்னை சென்ட்ரல் மற்றும் புறநகர் பகுதிகளில் 350-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டை அடையாளம் கண்டனர். பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டை திறந்து சோதனை செய்தபோது, கொலை செய்யப்பட்ட பெண்ணின் மீதி உடல் பாகங்கள், பிரியாணி அண்டாவில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த கொடூரக் கொலை தொடர்பாக, அந்த வீட்டில் தங்கியிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகாமதி மாஜி ஆகிய இருவரையும் மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் பகுதியில் கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார் கைது செய்து, விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.

விசாரணையில், திருமணத்தை மீறிய உறவு தொடர்பான பிரச்சினையில் இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது. ஹைத்துல் நிஷா கர்ப்பமாக இருந்த நிலையில் வயது அதிகம் எனக் கூறி மணிக் உத்தின் லஸ்கர், அவரை ஏற்க மறுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் போலீசாரிடமும் குடும்பத்தினரிடமும் தெரிவிப்பதாக மிரட்டியதால் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்களை காவலில் எடுத்து போலீஸ் விசாரித்து வருகின்றனர். அதன்படி, கொலை நடந்த கூடுவாஞ்சேரி வீட்டிற்கு இருவரையும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு ஹைத்துல் நிஷாவை எவ்வாறு கொலை செய்தனர் என்பதை இருவரும் நடித்துக் காட்டினர். கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 2 கத்திகள் மற்றும் ஒரு கத்திரிக்கோலும் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் உடல் பாகங்கள் விரைவாக அழுகி நாற்றம் வீசாமல் இருப்பதற்காக யூடியூப் வீடியோக்களை பார்த்து வினிகரை தெளித்து மூடி வைத்ததாகவும் பகீர் வாக்குமூலம் அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, கணவன், மனைவி இருவரையும் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸை எங்கு வைத்தனர் என்பதை இருவரும் போலீசாரிடம் நடித்துக் காட்டினர். குறிப்பாக ரயிலின் கழிவறை அருகே சூட்கேஸை ஓரமாக வைத்துவிட்டு அங்கிருந்து நடந்து சென்றதையும், பின்னர் பார்க் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிச் சென்றதையும் நடித்துக் காட்டினர்.

இதையடுத்து, இந்த வழக்கில் மேலும் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் கூடுவாஞ்சேரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் காவல் முடிந்த பிறகு அவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.