📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 27, 2026 01:32 AM

மாற்றம் வருமா...இந்தியா ஏற்றம் பெறுமா: 2வது டெஸ்டில் திருப்பம் ஏற்படுமா

மாற்றம் வருமா...இந்தியா ஏற்றம் பெறுமா: 2வது டெஸ்டில் திருப்பம் ஏற்படுமா

கிறைஸ்ட்சர்ச்: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய பவுலிங் கூட்டணியில் மாற்றம் செய்யப்படலாம். அனுபவ ‘வேகப்புயல்’ சிராஜ், குர்னுார் பிரார், ரவிந்திர ஜடேஜா வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் இன்று கிறைஸ்ட்சர்ச், ஹாக்லி ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. இதில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இந்தியா களமிறங்குகிறது.

இந்திய அணியின் ‘பேட்டிங்’ வலுவாக உள்ளது. முதல் டெஸ்டில் துவக்க வீரர் ராகுல் (136 ரன் ), ஜெய்ஸ்வால் (85), தேவ்தத் படிக்கல் (80), கேப்டன் சுப்மன் கில் (98), ரிஷாப் பந்த் (128) அசத்த, 720/9 ரன்னுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. மீண்டும் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

பவுலிங் தான் பலவீனமாக உள்ளது. எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த விரும்பினால், பவுலிங் கூட்டணியில் மாற்றம் அவசியம். கடந்த போட்டியில் பும்ரா, மொத்தம் 5 விக்கெட் சாய்த்தார். மற்ற ‘வேகங்கள்’ ஏமாற்றினர். இதனால், சிராஜ், ‘ஸ்பின் பவுலிங் ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜாவை சேர்க்கலாம். வெலிங்டன் ஆடுகளம் முழுக்க, முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இரு அணிகளும் சேர்ந்து, 407 ஓவரில் 1,327 ரன் எடுத்தன. 24 விக்கெட் தான் சரிந்தன. கிறைஸ்ட்சர்ச் ஆடுகளம் பவுலிங்கிற்கு உதவும். பந்துகள் நன்கு ‘பவுன்ஸ்’ ஆகும். இதை உணர்ந்து பவுலிங்கை பலப்படுத்த வேண்டும். சரியான கூட்டணியை கண்டறிவது அவசியம்.

ஆனால், ‘அணியில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது,’’என்று கூறினார் கேப்டன் சுப்மன் கில். இதை உறுதி செய்யும்விதமாக நேற்றைய வலை பயிற்சியில் பும்ரா, ஆகாஷ் தீப், கம்போஜ், பிரசித் கிருஷ்ணா பங்கேற்வில்லை. பொதுவாக ‘லெவனில்’ இடம் பெறுபவர்கள் தான் பயிற்சியை தவிர்ப்பர். சிராஜ் மீது கேப்டன் சுப்மன் கில், காம்பிருக்கு நம்பிக்கை இல்லை. நியூசிலாந்து அணியில் இடது கை பேட்டர்கள் அதிகம் இருப்பது ‘ஆப்–ஸ்பின்னர்’ வாஷிங்டன் சுந்தருக்கு சாதகம். பிரசித் கிருஷ்ணா, கம்போஜிற்கு பதிலாக சிராஜ் அல்லது 6.5 அடி உயரம் கொண்ட குர்னுார் பிராரை சேர்க்கலாம்.

முதல் டெஸ்டில், நியூசிலாந்து கேப்டன் டாம் லதாம் இரு இன்னிங்சிலும் ‘டக்’ அவுட்டானது பலவீனம். ஹென்றி நிக்கோல்ஸ் (175 ரன்), கிளன் பிலிப்ஸ், கான்வே, ரச்சின் ரவிந்திரா, டேரில் மிட்சல் போன்றோர் பொறுப்பாக ஆடி ‘டிரா’ செய்தனர். பந்துவீச்சில் இம்முறை மாற்றம் செய்யப்படலாம். கடந்த போட்டியில் ஜேக்கப் டபி 33, ஓவரில் 201 ரன் வழங்கினார். இவருக்கு பதில் மாட் பிஷர் களமிறக்கப்படலாம். ஜேமிசன், மாட் ஹென்றி கைகொடுக்கலாம்.

யார் ஆதிக்கம்

இரு அணிகளும் 66 டெஸ்டில் மோதின. இந்தியா 22, நியூசிலாந்து 16ல் வென்றன. 28 போட்டி ‘டிரா’ ஆனது.

* ஹாக்லி ஓவல் ஆடுகளத்தில் புற்கள் காணப்படுகின்றன. ‘வேகங்களுக்கு’ ஒத்துழைக்கும்.

* கிறைஸ்ட்சர்ச் வானிலையை கணிப்பது கடினம். இங்கு கடந்த சில நாட்களாக மழை பெய்தது. டெஸ்ட் போட்டியின் முதல் 3 நாளில் மழைக்கு வாய்ப்பு இல்லை. 4, 5வது நாள் காலையில் மழை பெய்யலாம்.

மார்கல் ஆதரவு

வெலிங்டன் டெஸ்டில், அன்ஷுல் கம்போஜ் 45 ஓவரில் 3/144 ரன் விட்டுக் கொடுத்தார். மணிக்கு அதிகபட்சமாக 130 கி.மீ., வேகத்தில் தான் பந்துவீசினார். இவருக்கு பதில் சிராஜுக்கு வாய்ப்பு அளிக்கலாம்.

இது பற்றி இந்திய பவுலிங் பயிற்சியாளர் மார்னே மார்கல் கூறுகையில்,‘‘வெலிங்டன் ஆடுகளம் மந்தமாக இருந்தது. இதனால் தான் பவுலர்களின் வேகம் குறைந்தது. இங்கு கம்போஜ் சிறப்பாகவே பந்துவீசினார். இவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். சிராஜ் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை. குர்னுார் பிரார் சாதிக்க தயாராக உள்ளார் ,’’என்றார்.