📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 27, 2026 06:32 AM

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தொடர் நாடாளுமன்றம் நவ.30ம் தேதி கூடுகிறது: ஒன்றிய அரசு அறிவிப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தொடர் நாடாளுமன்றம் நவ.30ம் தேதி கூடுகிறது: ஒன்றிய அரசு அறிவிப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தொடர் நாடாளுமன்றம் நவ.30ம் தேதி கூடுகிறது: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால் 2027ல் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகளின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும். எனவே 2029ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக இதை அமல்படுத்த சாத்தியமில்லை. இதில் திருத்தம் செய்யும் வகையில், 2029 மக்களவை தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை, 850 ஆக அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக கடந்த ஏப்ரல் 17ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு, அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற அவையில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை பலம் தேவை. ஆனால் ஆளும் பாஜவுக்கு போதிய ஆதரவு இல்லாததால் இந்த மசோதா தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து, மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி முடிவடைந்த நிலையில், கூட்டத்தொடர் முறைப்படி முடிக்கப்படாமலேயே இருந்தது.

தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவே அரசு 100 நாட்களுக்கும் மேலாக மழைக்கால கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வராமலே இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்கள் கிளப்பின. இந்நிலையில், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வகைசெய்யும் விதத்தில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா, திருத்தப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி, திங்கள்கிழமை தொடங்க உள்ளது.

அத்தியாவசிய அரசு அலுவல்களை மேற்கொள்ளவே இந்த சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தாலும், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 2029ம் ஆண்டு முதல் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்றவே இந்த சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 30ம் தேதி மக்களவையைக் கூட்டும்படி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடமும், மாநிலங்களவையை கூட்டுமாறு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடமும் அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இது குறித்து ரிஜிஜு தனது எக்ஸ் தள பக்கத்தில், அரசு அலுவல்களின் தேவைக்கு ஏற்ப இரு அவைகளின் அமர்வுகளும் டிசம்பர் 3ம் தேதி நிறைவடையக்கூடும் எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 12ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மசோதாவை நிறைவேற்றுவதற்கு தேவையான பெரும்பான்மையை விட 15 முதல் 18 வாக்குகள் கூடுதலாகப் பெற்று மசோதாவை நிறைவேற்ற முடியும் என்று கூறியிருந்தார். அரசியலமைப்பு தினமான நேற்று இணையதளத்தில் கட்டுரை வெளியிட்ட பிரதமர் மோடியும் தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியே தீருவோம் என சபதமிட்டுள்ளார். இந்த சூழலில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி கூட இருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

* பாஜ போடும் கணக்கு

நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள 543 இடங்களில் 3 இடங்கள் காலியாக உள்ளன. அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (361 வாக்குகள்) தேவைப்படுகிறது. தற்போது பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி பலம் 320 ஆக உள்ளது. இத்துடன் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்துள்ள 20 திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்கள், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா யுபிடி கட்சியின் 6 எம்பிக்கள் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.

இருப்பினும், மசோதாவை நிறைவேற்ற என்டிஏ கூட்டணிக்கு கூடுதல் எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் மக்களவையில் 8 எம்பிக்களை தன் வசம் கொண்டுள்ள சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திர பவார் பிரிவு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடி உள்ளது. கடந்த ஏப்ரலில் நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவானது குறிப்பிடத்தக்கது.

* அமைச்சரவை இன்று கூடுகிறது

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி தொடங்க இருப்பதையொட்டி இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும் அமைச்சரவை கூட்டத்தில் தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.