📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News November 27, 2026 06:00 AM

ரூ.1,200 கோடி இ-காமர்ஸ் விற்பனையை நிர்வகிக்கும் ‘Nuvr’

ரூ.1,200 கோடி இ-காமர்ஸ் விற்பனையை நிர்வகிக்கும் ‘Nuvr’

மென்பொருள் நிறுவனத்திலிருந்து இ-காமர்ஸ் மற்றும் விரைவு வர்த்தக செயல்பாடுகளை நிர்வகிக்கும் நிறுவனமாக மாறிய பெங்களூருவைச் சேர்ந்த Nuvr நிறுவனம், பிராண்டுகளின் இ-காமர்ஸ் மற்றும் விரைவு வர்த்தக (Quick Commerce) செயல்பாடுகளை நிர்வகித்து, தற்போது ரூ.1,200 கோடிக்கும் அதிகமான ஆன்லைன் விற்பனையை கையாளும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

எனினும், இது Nuvr நிறுவனத்தின் வருவாய் அல்ல. நிறுவனம் நிர்வகிக்கும் மொத்த விற்பனையை Revenue Under Management (RUM) எனக் குறிப்பிடுகிறது.

2023-ம் ஆண்டு Nuvr நிறுவனத்தின் நிறுவனர் புல்கித் சாப்ரா, ஒரு நுகர்வோர் பிராண்ட் நிறுவனரிடம் இ-காமர்ஸ் அனலிட்டிக்ஸ் மென்பொருள் குறித்து விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத கேள்வி ஒன்று எழுந்தது.

அந்தக் கேள்விக்கு புல்கித் சாப்ராவிடம் உடனடி பதில் இல்லை. இந்த உரையாடலே Nuvr நிறுவனத்தின் செயல்பாட்டை மாற்றியது. மென்பொருளை மட்டும் விற்பனை செய்வதிலிருந்து விலகி, பிராண்டுகளின் இ-காமர்ஸ் மற்றும் விரைவு வர்த்தக செயல்பாடுகளையே நிர்வகிக்கும் நிறுவனமாக Nuvr மாறியது.

விலை நிர்ணயம், விளம்பரம், சரக்கு திட்டமிடல், பொருட்களின் பட்டியல், விநியோகச் சங்கிலி மற்றும் ஆன்லைன் தளங்களுடனான உறவு உள்ளிட்ட பல்வேறு பணிகளை Nuvr மேற்கொள்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாட்டுக்குப் பிறகு, கூட்டாளி பிராண்டுகளுக்காக ரூ.1,200 கோடிக்கும் அதிகமான ஆன்லைன் விற்பனையை நிர்வகித்து வருவதாக Nuvr தெரிவித்துள்ளது. முதல் ஆண்டில் ரூ.125 கோடியாக இருந்த நிர்வாகத்தின் கீழ் வருவாய் என்னும் RUM தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. 2027-ம் நிதியாண்டின் முடிவில் இதை சுமார் ரூ.1,800 கோடியாக உயர்த்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

2026-ம் நிதியாண்டில் Nuvr நிறுவனத்தின் வருவாய் 10 லட்சம் அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. 2027-ம் நிதியாண்டில் இந்த வருவாய் சுமார் இரு மடங்காகும், என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் வெளிப்புற முதலீடு இல்லாமல் செயல்படுவதுடன் லாபகரமாகவும் இயங்கி வருவதாக புல்கித் சாப்ரா தெரிவித்துள்ளார். எனினும், லாப விகிதம் குறித்த விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.

மென்பொருளிலிருந்து செயல்பாட்டு நிர்வாகத்துக்கு

Nuvr நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு, புல்கித் சாப்ரா நுகர்வோர் சார்ந்த பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி, ஆன்லைன் சந்தை பிராண்டுகளை நிர்வகித்த அனுபவம் கொண்டிருந்தார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் முதலில் மென்பொருள் நிறுவனத்தை உருவாக்க அவர் திட்டமிட்டார். இதற்காக SaaS திட்டத்துடன் Antler-ன் residency திட்டத்திலும் இணைந்தார்.

ஆனால், பிராண்டுகளுடனான கலந்துரையாடல்கள் அவரது திட்டத்தை மாற்றின. பல முன்னணி நுகர்வோர் நிறுவனங்களுக்கு உற்பத்தி மற்றும் நேரடி விற்பனை குறித்த நல்ல அனுபவம் இருந்தாலும், இ-காமர்ஸ் துறையில் விலைகளை தொடர்ந்து மாற்றுவது, விளம்பரங்களை நிர்வகிப்பது, கிடங்குகள் மற்றும் டார்க் ஸ்டோர்களில் சரக்குகளை பராமரிப்பது போன்ற பணிகள் புதிய சவால்களாக இருந்தன.

தரவுப் பகுப்பாய்வு மட்டும் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. தகவல்களை புரிந்துகொண்டு, சரியான முடிவுகளை எடுத்து, அவற்றை செயல்படுத்தும் குழுவும் தேவைப்பட்டது. இதை Nuvr தனது முக்கிய வாய்ப்பாகக் கண்டது.

Nuvr நிறுவனத்தின் முதல் முக்கிய பிராண்ட் கூட்டாளியாக திசு மற்றும் சுகாதாரப் பொருட்கள் தயாரிப்பாளரான Origami இணைந்தது. அதன் தயாரிப்புகள், உற்பத்தித் திறன் மற்றும் ஆன்லைனில் அதிக அளவில் விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக Nuvr குழு முதலில் Origami தொழிற்சாலைக்கே சென்றது.

முதல் 12 மாதங்களில் Origami நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகம் இரு மடங்காக உயர்ந்ததாக Nuvr தெரிவித்துள்ளது. சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூட்டணி தொடங்கியபோது இருந்த மாதாந்திர வருவாய் விகிதத்துடன் ஒப்பிடுகையில், தற்போது அது கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துள்ளதாக சாப்ரா கூறுகிறார்.

தற்போது Origami, Medimix, Nilon’s, CLEAR உள்ளிட்ட பல பிராண்டுகளுடன் Nuvr பணியாற்றி வருகிறது.

வழக்கமான விளம்பர நிறுவனங்களைப் போல ஆலோசனைகளை மட்டும் வழங்காமல், ஒரு பிராண்டின் ஆன்லைன் வர்த்தகத்தின் பெரும்பகுதியை நேரடியாக நிர்வகிப்பதே Nuvr-ன் அணுகுமுறை என சாப்ரா கூறுகிறார். நிறுவனம் நிர்வாகக் கட்டணத்தை வசூலிப்பதுடன், அதன் செயல்பாடுகளால் கிடைக்கும் வருவாய் முடிவுகளின் அடிப்படையிலும் கட்டணத்தின் ஒரு பகுதி நிர்ணயிக்கப்படுகிறது.

Nuvr-ன் வளர்ச்சியில் பெரும்பகுதி விளம்பரப்படுத்தல் அல்லது பாரம்பரிய விற்பனை நடவடிக்கைகள் மூலம் கிடைத்ததல்ல. வாடிக்கையாளர்களின் பரிந்துரைகள் மற்றும் வாய்மொழி பரிந்துரைகள் மூலமே பெரும்பாலான வளர்ச்சி ஏற்பட்டதாக சாப்ரா தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தில் தற்போது சுமார் 65 ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 35 முதல் 40 பேர் பெங்களூருவிலும், சுமார் 20 பேர் கொல்கத்தாவிலும் பணியாற்றுகின்றனர். மேலும் சிலர் தொலைதூரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு SKU-வையும் தனித்தனி வர்த்தக அலகாகக் கண்காணிப்பு

Nuvr-ன் செயல்பாட்டு முறையில், பெங்களூருவின் ஒரு பகுதியில் Blinkit மூலம் விற்பனை செய்யப்படும் ஒரு பொருள் தனித்தனி வர்த்தக அலகாகக் கருதப்படுகிறது. அதே பொருள் மற்றொரு தளத்தில் அல்லது வேறு பகுதியில் விற்பனை செய்யப்பட்டால், அது மற்றொரு தனி அலகாகக் கண்காணிக்கப்படுகிறது.

இதன் மூலம் ஒவ்வொரு பொருளின் செயல்திறனையும் மிக நுணுக்கமாக கண்காணிக்க முடிகிறது.

Nuvr உருவாக்கியுள்ள உள்நாட்டு தொழில்நுட்ப தளமான Nuvr OS, பொருட்களின் விலை, இருப்பு நிலை, போட்டியாளர்களின் நடவடிக்கைகள் மற்றும் விளம்பர செயல்பாடுகளை கண்காணிக்கிறது. போட்டி நிறுவனம் தனது பொருளின் விலையை மாற்றினாலோ அல்லது இருப்பு இல்லாமல் போனாலோ, Nuvr OS அதை அடையாளம் கண்டு, அதற்கேற்ற நடவடிக்கையை பரிந்துரைக்க முடியும்.

இருப்பினும், முடிவெடுப்பதில் மனிதர்களின் பங்களிப்பு தொடர்கிறது. விற்பனையை அதிகரிப்பது மட்டுமே Nuvr-ன் நோக்கம் அல்ல. விலைக் குறைப்பு அல்லது கூடுதல் விளம்பரச் செலவு மேற்கொள்ளப்பட்டாலும், அது லாப வரம்பைக் கருத்தில் கொண்டு பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

இ-காமர்ஸ் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட AI அடிப்படையிலான proprietary operating system ஆக Nuvr OS-ஐ நிறுவனம் வர்ணிக்கிறது. தற்போது இது பெரும்பாலும் Nuvr ஊழியர்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு SaaS தயாரிப்பாகவும் இதை வழங்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவைத் தாண்டி விரிவாக்கம்

Marketplace நிர்வாகம், விளம்பரம், சரக்கு திட்டமிடல் மற்றும் சர்வதேச செயல்பாடுகள் உள்ளிட்ட துறைகளில் Upriver, Assiduus Global போன்ற நிறுவனங்களும் Nuvr-க்கு போட்டியாக உள்ளன. ஆனால், தினசரி வர்த்தக செயல்பாடுகளை நேரடியாக நிர்வகிப்பதுடன், வருவாய் முடிவுகளுடன் தனது கட்டணத்தின் ஒரு பகுதியை இணைப்பதன் மூலம் தனித்துவம் பெற Nuvr முயற்சிக்கிறது.

பல பிராண்டுகளுடன் பணியாற்றுவதன் மூலம் குறிப்பிட்ட ஒரு துறையைப் பற்றிய ஆழமான அறிவை Nuvr பெற முடியும். அதே நேரத்தில், ஒரே துறையில் போட்டியிடும் பிராண்டுகளுடன் பணியாற்றும்போது நலன் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பும் உள்ளது.

ஒரு சில பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் எத்தனை போட்டி பிராண்டுகளுக்கு ஒரே நேரத்தில் சேவை வழங்க முடியும் என்பதற்கு வரம்புகள் இருக்கலாம் என்பதை சாப்ரா ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தியாவுக்கு வெளியேயும் Nuvr தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு வாடிக்கையாளரின் Amazon வர்த்தகத்தை முழுமையாக நிர்வகித்து வரும் Nuvr, ஆரம்பகட்டமாக அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

சர்வதேச விரிவாக்கத்துடன் நிறுவனத்தின் வர்த்தக மாதிரியும் மாறக்கூடும். இந்தியாவில் Nuvr பொதுவாக சரக்குகளை சொந்தமாக வைத்திருக்காமலும், நேரடியாக கையாளாமலும் ஆன்லைன் வர்த்தகங்களை நிர்வகிக்கிறது. வெளிநாடுகளில் சரக்குகளைத் தானே வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்குமா என்பது குறித்து நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

அவ்வாறு செய்தால் செயல்பாடுகளில் அதிக கட்டுப்பாட்டைப் பெற முடியும். அதே நேரத்தில், நிறுவனத்தின் மூலதனத் தேவையும் அதிகரிக்கும்.

இந்த நிதியாண்டில் Nuvr நிறுவனம் வெளிப்புற முதலீட்டை திரட்டும் திட்டம் இல்லை என்று சாப்ரா தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் முதலீடு பெற வேண்டிய நிலை ஏற்பட்டால், வழக்கமான venture capital நிதிச் சுற்றைக் காட்டிலும், நிறுவனத்துக்கு மூலோபாய ரீதியாக பயனளிக்கும் முதலீட்டாளரைத் தேர்வு செய்ய விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் Nuvr-ன் ஆண்டு வருவாய் ரூ.100 கோடியைத் தாண்டும் என சாப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து உலகளாவிய டிஜிட்டல் வர்த்தக நிறுவனத்தை உருவாக்குவதே Nuvr-ன் நீண்டகால இலக்காகும். தொழில்நுட்பத்துடன் தனது செயல்பாட்டு திறன்களையும் இணைத்து உலகளாவிய நிறுவனமாக வளர வேண்டும் என்பதே சாப்ராவின் நோக்கம். எதிர்காலத்தில் Nuvr நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

தமிழில்: முத்துகுமார்