📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 01, 2026 12:33 PM

‘மேகதாது அணைக்காக காடுகள் அழிக்கப்படுவதை எதிர்ப்பாரா ராகுல்காந்தி’

‘மேகதாது அணைக்காக காடுகள் அழிக்கப்படுவதை எதிர்ப்பாரா ராகுல்காந்தி’

‘மேகதாது அணைக்காக காடுகள் அழிக்கப்படுவதை எதிர்ப்பாரா ராகுல்காந்தி’ - கேள்வியெழுப்பிய அன்புமணி

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசை வெளிப்படையாகவே நான் விமர்சித்து வருகிறேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published : August 1, 2026 at 11:11 AM IST

சென்னை: மேகதாது அணைக்காக காடுகள் அழிக்கப்படுவதை ராகுல் காந்தி எதிர்ப்பாரா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில், “அந்தமானில் காட்டை அளித்தால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அதனை கடுமையாக எதிர்க்கிறார். அதேபோல், மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு காடுகளை அழிப்பதை ராகுல்காந்தி கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா. மேலும், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசை நான் வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறேன்.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளும் அரசியல் காரணங்களுக்காக சூழ்ச்சி செய்கிறது. இதனை நான் தொடர்ந்து வெளிப்படையாகவே கூறி வருகிறேன். கர்நாடகாவில் உள்ள 4 அணைகளில் 68 டி.எம்.சி. கொள்ளளவு உள்ளது. கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 20 நாட்களில் காவிரி நடுவர் மன்றம் இரண்டு முறை உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடக அரசு தண்ணீர் இல்லை என்று பொய் கூறி தண்ணீரை திறந்துவிட மறுக்கிறது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு செல்லக்கூடாது. மத்திய அரசு, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் என யார் கூறியதையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. மதிக்காத கர்நாடக அரசை சந்தித்து பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

நல்லிணக்க அடிப்படையில் கூட தண்ணீர் திறக்க கர்நாடக அரசிற்கு மனமில்லை. அத்தகைய கர்நாடக அரசிடம் முதலமைச்சர் விஜய் சென்று என்ன பேசுவார்? முதலமைச்சர் விஜய் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும்.

மேலும், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று கர்நாடக அரசை தண்ணீர் திறக்க வைக்க வேண்டும். கர்நாடகாவில் வேண்டுமென்றே பதற்றமான சூழலை ஏற்படுத்த அம்மாநில அரசு தூண்டிவிடுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது.

காவிரி பிரச்சினை என்பது த.வெ.க.வின் பிரச்சினை இல்லை. காவிரி என்பது தமிழ்நாட்டின் பிரச்சினை. மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதில் தமிழ்நாடு அரசிற்கு என்ன தயக்கம்? தமிழ்நாடு அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

முதலமைச்சர்களின் சந்திப்பில் கூட வெளிப்படைத் தன்மை இல்லாமல் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. தமிழ்நாடு அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டறவு கடன் தள்ளுபடியால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில், சாகுபடிக்கு தேவையான நீரும் தமிழ்நாட்டில் இல்லை. மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. தற்போது குறுவை சாகுபடி முடிந்துவிட்டது. சம்பாவிற்கு தண்ணீர் இருக்குமா என தெரியவில்லை.

இதுபோன்ற காரணங்களால், தமிழ்நாட்டில் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு சென்றால் தண்ணீரை திறந்து விடுவார்கள். மேகதாது அணையை கட்ட வேண்டாம் என்றால் கட்டமாட்டார்கள் என நினைத்து கொண்டு இருக்கிறார்.

பல முதலமைச்சர்களை கர்நாடகா பார்த்துள்ளது. தற்போது கர்நாடகாவின் முதலமைச்சராக இருக்கும் டி.கே. சிவக்குமார் அரசியல் காரணங்கள், தேர்தலுக்காக கண்டிப்பாக அணையை கட்டுவேன் என தீர்மானத்தில் இருக்கிறார். இத்தகைய சூழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் விழுந்துவிடக் கூடாது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.