தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசவிருக்கும் சிங்கப்பூர் உஸ்பெகிஸ்தான்
டாஷ்கென்ட்: சிங்கப்பூரும் உஸ்பெகிஸ்தானும் தடையற்ற வர்த்தக ஒப்பந்ததை நோக்கி அதிகாரபூர்வமாக முதல் அடியை எடுத்துள்ளன.
இரு நாடுகளும் பொருளியல் உறவுகளை வலுப்படுத்தி வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்த முற்பட்டுள்ளன.
சிங்கப்பூரும் உஸ்பெகிஸ்தானும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த கலந்துரையாடல்களைத் தொடங்குவதற்கான ஒருங்கிணைந்த அறிக்கையில் கையெழுத்திட்டன.
உஸ்பெகிஸ்தானுக்கு அதிகாரத்துவப் பயணமாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் சென்றிருக்கும் வேளையில் அறிக்கை கையெழுத்தானது.
மூத்த அமைச்சர் லீ, உஸ்பெகிஸ்தான் முதலீடு, வர்த்தக, தொழில் அமைச்சர் லஸிஸ் குட்ராடோ ஆகியோரின் முன்னிலையில் பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வேறு இரண்டு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
முதலீடு, வர்த்தக, தொழில் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன.
வர்த்தகத்துக்குத் தடையாக இருக்கக்கூடிய வரிகள் போன்றவற்றை நீக்கி வர்த்தகத்தை இன்னும் எளிதாக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன.
முன்மொழியப்பட்ட உடன்பாடு சந்தையை எளிதில் சென்றடைய வழிவகுப்பதுடன் இருநாட்டு வர்த்தகங்களுக்கும் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அண்மை ஆண்டுகளில் சிங்கப்பூருக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் வளர்ச்சியடைந்துள்ளன.
2024ஆம் ஆண்டு மத்திய ஆசிய நாடுகளில் உஸ்பெகிஸ்தான் சிங்கப்பூரின் இரண்டாம் ஆகப் பெரிய சேவை வர்த்தகப் பங்காளியாக இருந்தது.
கடந்த ஆண்டு அந்த வட்டாரத்தில் அது மூன்றாம் ஆகப் பெரிய சரக்கு வர்த்தகப் பங்காளியாக இருந்தது.
கடந்த ஆண்டு இருதரப்பும் செய்துகொண்ட சரக்கு வர்த்தகத்தின் மதிப்பு கிட்டத்தட்ட $69 மில்லியன்.
2024ஆம் ஆண்டு சேவை வர்த்தகத்தின் மதிப்பு, $109.6 மில்லியன்.
அதே ஆண்டு உஸ்பெகிஸ்தானில் சிங்கப்பூரின் நேரடி முதலீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட $390 மில்லியன்.