மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை பயன்படுத்தாமல் அதிக விலைக்கு வாங்குவதா? மா. கம்யூனிஸ்ட் சண்முகம் வலியுறுத்தல்
பொள்ளாச்சி: ‘‘தமிழகத்தில் விலைவாசி உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த த.வெ.க., அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்,’’ என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழக செயலர் சண்முகம் கூறினார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி சங்கம்பாளையத்தில், நேற்று நடந்த கட்சி அலுவலக திறப்பு விழாவில் அவர் பங்கேற்றார். பின் சண்முகம் அளித்த பேட்டி:
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘இண்டி’ கூட்டணி சார்பிலும், இளைஞர்கள், மாணவர்கள் சார்பிலும், கடந்த, 10 நாட்களாக டில்லியில் போராட்டம் நடக்கிறது.
முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், மக்களின் ஓட்டுரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதே ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு. தி.மு.க.,வும் தன் முரண்பாடுகளை களைந்து, மக்களுக்காக இணைய வேண்டும் என மா.கம்யூ., கட்சி சார்பில் அழைப்பு விடுக்கிறேன்.
தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, ‘ஏழரை சனிகள் ஒழிந்தது; தி.மு.க.,வுக்கு இனி நல்ல காலம்’ எனக்கூறியுள்ளார். சட்டசபை பொதுத்தேர்தலில் தி.மு.க.,வுடன் வலுவான கூட்டணியில் இருந்தும் தோல்வியை சந்தித்தோம். தோல்விக்கு தி.மு.க., தான் காரணம் என நான் கூறவில்லை. ஆனால், மூத்த அரசியல்வாதியான பாரதி, இப்படியான வாய் துடுக்கான பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
த.வெ.க., அரசு, விலைவாசி உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த முனைப்புடன் செயல்பட வேண்டும். ஆனால், அமைச்சர்கள், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், மாறி மாறி பேட்டி மட்டும் கொடுக்கின்றனர்.
தமிழகத்துக்கு எவ்வளவு மின்சாரம் தேவை என முன்கூட்டியே கணித்து, அறிந்து, குறைந்த விலையில் மின்சாரம் வாங்கியிருக்க வேண்டும். அவசரத்தில், ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு வாங்குவது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கேள்விப்படாத ஒன்று. தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் முழு அளவில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மின் உற்பத்திக்கான, கட்டமைப்பு வசதிகள் இருந்தும் அதை பயன்படுத்தாமல், அதிக விலைக்கு மின்சாரம் ஏன் வாங்க வேண்டும்?
மின்சாரம், போக்குவரத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை என, எந்த துறையாக இருந்தாலும், பணியிடத்துக்கு நிரந்தமான ஆட்களை நியமிக்க வேண்டும்; ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை கைவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னதாக, மா.கம்யூ., அலுவலக கட்டட திறப்பு விழாவின்போது, மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், ‘மொபைல்போன் டார்ச் லைட்’ வெளிச்சத்தில் திறப்பு விழா நடந்தது.