சிங்கப்பூர் புகைமூட்டம்: காற்று மாசுபாடும் எல் நினோ விளைவும்
சிங்கப்பூரின் வானம் மீண்டும் சாம்பல் போர்வை போர்த்தியுள்ளது. இது மூடுபனியன்று நச்சுப் போர்வை. காற்றுத்தரத்திற்கான 24 மணி நேர பிஎஸ்ஐ குறியீடு 140, 150ஐ எட்டியதெல்லாம் பழைய செய்தி. குறிப்பாக, அக்டோபர் 14 அன்று ஒருகட்டத்தில் சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் அக்குறியீடு 288ஐத் தொட்டது.
இது வெறும் எண் மட்டுமன்று. இந்த எண்ணுக்குப் பின்னால் ஒரு நாடே தன் இயல்பு வாழ்க்கையை நிறுத்தியுள்ளது.
தென்கிழக்குக் காற்றால் இந்தோனீசியாவின் தெற்கு சுமத்ரா, கலிமந்தானிலிருந்து அடர்புகை நேரடியாகச் சிங்கப்பூருக்குக் கடத்தப்படுகிறது. புகையைச் சிங்கப்பூருக்கு அனுப்பிவிடுவதில் காற்றின் திசையும் ஒரு காரணம் என்று அதன்மீது பழிபோட்டாலும் அடிப்படைக் காரணத்தை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது.
இவ்வாண்டு ஏன் இவ்வளவு மோசம்? இதற்கு வலுவான ஓர் காரணம் ‘காட்ஸில்லா’ என்று வருணிக்கப்படும் சூப்பர் எல் நினோ. வழக்கத்தைவிட வறண்ட, வெப்பமான வானிலையானது மழையைக் குறைத்து, கரிநிலக் காடுகளில் பற்றிய தீயை வாரக்கணக்கில் அணையவிடாமல் அணைபோட்டுக் காத்து வருகிறது.
ஆயினும் இது இயற்கைப் பேரிடரா? செம்பனைத் தோட்டங்களுக்காக வைக்கப்படும் தீக்குப் பருவநிலை மாற்றம் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகியுள்ளது. இது மனிதர்களால் விளைந்தது என்று சொன்னாலும் மிகையாகாது. ஆயினும், அதில் ஒரு பொருளியலும் மறைந்துள்ளது.
இதில் மிகப்பெரிய முரண் என்னவெனில், இந்த புகைப் பொருளியலால் உருவாகும் லாபமும் இழப்பும் சமமாகப் பிரிக்கப்படுவதில்லை.
முதல் உலக நாட்டில் வாழும் நாமும்கூட சுத்தமான காற்றை சுவாசிக்க குளிரூட்டப்பட்ட சமூக மன்றங்களிலும், குடியிருப்பாளர் குழு மையங்களிலும் தஞ்சம் புக வேண்டிய நிலை தென்படுவதும் கவலைக்குரியது.
$3 கொடுத்து முகக்கவசம் வாங்குவதுமுதல் $300 கொடுத்து காற்றை வடிகட்டும் கருவிவரை செலவினங்கள் சேர்ந்துகொள்கின்றன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
காட்டுத்தீ தொடர்பில் இந்தோனீசியாவில் பல நிறுவனங்களுக்கு மூடுமுத்திரை வைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ‘கிரீன்பீஸ்’ அமைப்பு 20 பெரிய நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளது, அவற்றில் சில சிங்கப்பூர், மலேசியாவை தலைமையகமாகக் கொண்டவை.
ஆயினும், 2014ல் கொண்டுவரப்பட்ட சிங்கப்பூரின் எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தின்கீழ் இதுவரை அபராதம் எதுவும் விதிக்கப்பட்டதாக தெரியவில்லை.
தேசியச் சுற்றுப்புற அமைப்பின் வழிகாட்டுதலின்படி, முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் போன்றோர் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், வெளியில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்கள், கட்டுமான ஊழியர்கள், உணவு விநியோகம் செய்வோர் எனப் பலதரப்பினர்க்கு ‘வீட்டில் இருந்து வேலை’ செய்வது கட்டுப்படியாகாத ஓர் ஆடம்பரம். நுரையீரலைப் பணயம் வைத்துதான் அவர்கள் அன்றாடம் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்.
மலேசியாவில் பள்ளிகள் மூடப்பட்டன. சிங்கப்பூரில் பள்ளிகள் திறந்திருந்தாலும், விளையாட்டுத் திடல்கள் பெரும்பாலும் ஆளரவமின்றி இருப்பதைக் காணமுடிகிறது.
ஒரு தலைமுறைக் குழந்தைகள் வெளியில் விளையாடும் உரிமையை இழக்கின்றனர். பலர் என்95 முகக்கவசம் அணிகின்றனர். ஆயினும், இத்தகைய சூழலால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம்.
புகை கலைந்துவிடலாம். ஆனால், அது உண்டாக்கும் கேட்டை யார் களைவார்? அடுத்த ஆண்டு மீண்டும் புகைமூட்டம் வராது என்று உறுதியாகக் கூற இயலுமா?
ஒவ்வோர் ஆண்டும் நாம் பணம் கொடுத்துப் புகையை வாங்கிக்கொண்டே இருக்கவேண்டும், புகை விற்பன்னர்கள் அதை அனுப்பிக்கொண்டே இருப்பார்களா? காத்திருப்போம் காற்று நமக்கு ஆதரவாக வீசும்வரை!