📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 03, 2026 06:03 AM

மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல்: அறிக்கை தாக்கல் செய்ய கெடு விதிப்பு

மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல்: அறிக்கை தாக்கல் செய்ய கெடு விதிப்பு

சென்னை: 'அ.தி.மு.க., ஆட்சியில், மதுரை மத்திய சிறையில், 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை, நான்கு மாதங்களுக்குள் விசாரித்து முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறைவாசிகள் உரிமை மையத்தின் இயக்குநரும், வழக்கறிஞருமான பி.புகழேந்தி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த எழுதுபொருள், மருத்துவ பொருட்களை, நீதிமன்றங்கள், அரசு துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது போலவும், கைதிகளுக்கு ஊதியம் கொடுத்தது போலவும், போலி கணக்கு தயாரித்துள்ளனர். கடந்த 2016 முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலத்தில், 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து, லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, 'வழக்கில் முகாந்திரம் இருந்தால், ஊழல் தடுப்பு துறை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம்' என, உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பான மற்றொரு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.புகழேந்தி ஆஜராகி, ''போலி கணக்கு காட்டி, 100 கோடி ரூபாய் ஊழல் செய்தது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

''ஊழல் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை உணர்ந்து, விசாரணையை விரைவு படுத்த வேண்டும்,'' என்றார்.

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சி.ஆர்.மலர்வண்ணன் ஆஜராகி, ''விரிவான விசாரணையை முடிப்பதற்கு, மேலும் கால அவகாசம் தேவை,'' என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில், சிறப்பு குழு அமைத்து, நான்கு மாதங்களில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கைகளை தொடரலாம்.