'விஜயை ராகுல் பிரதமராக்குவார்' : த.வெ.க.,
சென்னை: ''விஜயை, முதல்வர் நாற்காலியில் அமர வைத்த ராகுலே, விஜயை பிரதமராகவும் அமர வைப்பார்,'' என த.வெ.க., -எம்.எல்.ஏ., கனிமொழி தெரிவித்தார்.
'பிரதமர் வேட்பாளராக காங்., மூத்த தலைவர் ராகுலை, த.வெ.க., ஏற்காவிட்டால், தமிழக அமைச்சரவையில் இருந்து இரு காங்., அமைச்சர்களும் பதவி விலக தயங்க மாட்டோம்,' என, காங்., அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரித்தார்.
இதனால், த.வெ.க., - காங்., கூட்டணியில் மோதல் ஏற்பட்டதையடுத்து, முதல்வர் விஜயை, தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர், காங்., - எம்.பி., பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர். எனினும், இரு கட்சியினரிடையே மோதல் நீடிக்கிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று த.வெ.க., - எம்.எல்.ஏ., கனிமொழி அளித்த பேட்டி:
வரும் 2029-ல் பிரதமர் யார் என்பதை, டில்லியில் இருந்து முடிவு செய்யப்போவது இல்லை. தமிழகத்தில் இருந்து தான் முடிவு செய்யப்போகின்றனர். விஜய் முதல்வராவார் என, கடந்த ஆண்டு நான் கணித்ததை போல, 2026-ல் விஜய் முதல்வரானார்.
இப்போது சொல்கிறேன். வரும் 2029-ல் தமிழகத்தில் இருந்து தான் பிரதமர் வரப்போகிறார். அந்த ஆண்டு இந்திய அரசியலில் பெரும் மாற்றம் நிகழும். விஜயை, முதல்வர் நாற்காலியில் ராகுல் தான் அமர வைத்தார். அதேபோல் ராகுலே, விஜயை பிரதமராகவும் அமர வைப்பார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இது குறித்து, காங்., சட்டசபை குழு தலைவர் தாரகை கத்பட் கூறுகையில், ''அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் ராகுல். இதுவரை, ராகுல் தான் பிரதமர் என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
''த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் புதிதாக வந்தவர்கள்; ரசிகர் மனப்பான்மையில் உள்ளதால், தங்கள் தலைவரை, பிரதமர் என சொல்கின்றர். ஆனால், 2029ல் ராகுல் தான் பிரதமர்,'' என்றார்.
தமிழகத்தில், இரு கழகங்களின் மீதான மக்களின் வெறுப்பால், த.வெ.க.,விற்கு 108 இடங்கள் கிடைத்து, முதல்வராக விஜய் பதவியேற்றார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, ஊழலற்ற ஆட்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற கொள்கைகளுக்காக, த.வெ.க., அரசுக்கு காங்., ஆதரவு அளித்தது. முதல்வர் விஜயால் தோற்கடிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் குற்றம் புரிந்தவர்கள், ஜோதிடர்கள் கூறுவதை வைத்து அரசியல் செய்ய நினைக்கின்றனர். எனவே, ஜோதிடர்கள் கூறுவதை பெரிதாக்க வேண்டாம்.'பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்' என தீர்மானித்து விட்டோம். 'தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்' என பேசிக்கொண்டு இருக்காமல், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபை நிகழ்ச்சியின் நேரலையால், யார் கேள்வி கேட்கின்றனர்; யார் தகுந்த பதில்களை சொல்கின்றனர் என்பதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். - மாணிக்கம் தாகூர், காங்., தமிழக தலைவர்