மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தமிழ் திருமுறைகளை பாட நீதிமன்றம் அனுமதி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தமிழ் திருமுறைகளை பாட நீதிமன்றம் அனுமதி
தமிழ் திருமுறை ஓதுவார்கள் தமிழ் மந்திரங்களை பாடுவதற்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்றம், இந்த உத்தரவு இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள அனைத்து கோயில்களுக்கும் பொருந்தும் என உத்தரவிட்டுள்ளது.
Published : September 2, 2026 at 9:49 AM IST
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில், சமஸ்கிருத வேதங்களுடன் இணைந்து தமிழ் திருமுறைகள் மற்றும் தமிழ் மந்திரங்களை ஓதுவார்கள் பாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு (2026) நடைபெற உள்ள குடமுழுக்கு, கோபுர கலச நன்னீராட்டு பெருவிழா, கருவறை பூஜை மற்றும் வேள்வி உள்ளிட்ட நிகழ்வுகளில் தமிழ் திருமுறைகள் மற்றும் தமிழ் சைவ மந்திரங்களை ஓதுவதற்கு அனுமதி கோரி சத்தியபாமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், சத்தியபாமா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவராக இருப்பதாகவும், தமிழ் வேத ஆகமங்கள், சைவ ஆகமங்கள் மற்றும் குடமுழுக்கு தொடர்பான மந்திரங்களை தமிழ் மொழியில் கற்பித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு குடமுழுக்கு நிகழ்வுகளில் சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே பிரதானமாக இடம்பெறுவதால், தமிழ் திருமுறை ஓதுவார்கள் கருவறைக்கு வெளியே அமர்ந்து தமிழ் பாடல்களை பாடும் நிலை இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
மேலும், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா குடமுழுக்கு நடத்தப்பட உள்ள நிலையில், கோபுர கலசம், கருவறை மற்றும் வேள்வி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் தமிழ் திருமுறைகள் மற்றும் தமிழ் சைவ மந்திரங்களை பாட அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.
இதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர், தமிழ் மந்திரங்கள் அனுமதிக்கப்படாது என்ற அச்சத்தின் அடிப்படையிலேயே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், கோவில் ஓதுவார்கள் மூலம் தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட தமிழ் திருமுறைகள், சமஸ்கிருத வேதங்களுடன் இணைந்து பாடுவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த விளக்கத்தை பதிவு செய்து, குடமுழுக்கின் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் சமஸ்கிருத வேதங்களுடன் இணைந்து தமிழ் திருமுறை ஓதுவார்கள் தமிழ் மந்திரங்களை பாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், இந்த உத்தரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மட்டும் பொருந்துவது அல்ல என்றும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் இதனை முறையாக நடைமுறைப்படுத்துவதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.