பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்த முதல்வர் விஜய்க்கு நன்றி
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்த முதல்வர் விஜய்க்கு நன்றி - சமூக ஆர்வலர் மேதா பட்கர்
பரந்தூர் மக்கள், தாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் வறுமை குறித்த ஆழ்ந்த கவலையை, கண்ணீருடன் வெளிப்படுத்தியதை என்னால் கேட்க முடிந்தது என மேதா பட்கர் கூறியுள்ளார்.
Published : September 2, 2026 at 1:21 PM IST
சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததற்காக சமூக ஆர்வலர் மேதா பட்கர், முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு (NAPM TN) சார்பில் மேதா பட்கர் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், ”தமிழ்நாடு முதலமைச்சராக வெற்றிப் பெற்றதற்கு வாழ்த்துகள். ஏழைகளை கொண்டாடுவதற்காக மட்டுமல்லாமல், மதுபான வணிகம் தொடர்பான ஒரு முடிவு உட்பட, ஏழைகளை காப்பாற்றுவதற்காக எடுத்து வரும் பல்வேறு முடிவுகளை பற்றி அறிந்து வருகிறோம்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டு, சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிப்காட் (SIPCOT) திட்டத்தால் ஏற்கனவே ஊக்குவிக்கப்பட்ட தொழில்களுக்கு ஆதரவாக இருப்பதால், 13 கிராமங்களின் 4500 ஏக்கர் விவசாய நிலங்களையும், பல்வேறு நீர்நிலைகள் மற்றும் ஈரநிலங்களைக் கொண்ட முழு சுற்றுச்சூழல் அமைப்பையும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதனைக் காப்பாற்றுவதற்கான முடிவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அமைந்துள்ளது. பரந்தூர் போராட்டத்தின் 219வது நாளில் பாதிக்கப்பட இருந்த கிராமங்களுக்கு நான் நேரில் சென்று கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது, இயற்கையையும், தங்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முழுமையாக போராட்டத்தின் போது அங்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளுக்கு இழப்பீடு கேட்காத பெண்கள் மற்றும் ஆண்களின் பேச்சைக் கேட்டேன்.
தாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் வறுமை குறித்த ஆழ்ந்த கவலையை, கண்ணீருடன் வெளிப்படுத்தியதை என்னால் கேட்க முடிந்தது. இயற்கையைச் சார்ந்த சமூகங்கள் மதிக்கப்படுவதுடன், அவற்றுக்கு உரிய இடமும், ஆதரவும் அளிக்கப்பட வேண்டும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தீவிரமான பிரச்சனையாகும். ஜனநாயக இந்தியா முழுவதும், கிராம சபைகளின் முடிவுகளும் தொலைநோக்குப் பார்வையும் மதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
பரந்தூர் பகுதி கிராமங்களில், கிராம சபைகளின் தீர்மானங்களை அரசு கருத்தில் கொள்கிறது, வளர்ச்சி என்ற பெயரில், விவசாயிகள், தொழிலாளர்கள், நீர்நிலைகள் மற்றும் அடையாறு ஆறு உள்ளிட்ட எந்தவொரு சூழல் அமைப்பையும் பாதிக்காமல், சென்னையிலேயே தற்போதுள்ள விமான நிலையத்தை விரிவுபடுத்துவதைக் கருத்தில் கொண்டதற்காக நன்றி.
முல்லைப் பெரியாறு குறித்த தற்போதைய விவாதம் தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள், மற்றும் மக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.