📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 19, 2026 02:33 PM

 மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : 'செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யக் கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் சில இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழக கடலோரப் பகுதிகளில், கீழ்மட்ட வளிமண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

அதனால், இன்று, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில், சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இடி, மின்னல், பலத்தக் காற்றுடன், கன மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில், சில இடங்களில், இடி, மின்னல், பலத்தக் காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை, தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில், நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.