📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 19, 2026 03:33 PM

நீட் தேர்விற்கு எதிரான திராவிடர் கழக வாகன பேரணிக்கும் அனுமதி

நீட் தேர்விற்கு எதிரான திராவிடர் கழக வாகன பேரணிக்கும் அனுமதி

நீட் தேர்விற்கு எதிரான திராவிடர் கழக வாகன பேரணிக்கும் அனுமதி - காவல்துறை தகவல்

திருநெல்வேலியில் நடைபெறும் திராவிடர் கழகத்தின் எழுச்சி மாநாட்டிற்கு காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Published : August 19, 2026 at 1:53 PM IST

சென்னை: நீட் தேர்விற்கு எதிராக திராவிடர் கழகத்தினர் நடத்தும் வாகன பேரணிக்கு நாளை (ஆகஸ்ட் 20) அனுமதி வழங்கப்படும் என்று காவல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கிட்டை எதிர்த்தும் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தினர் சார்பாக இருசக்கர வாகனப் பிரச்சார பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக்கோரி காவல் துறைக்கு திராவிடர் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை இந்த கோரிக்கையை ரத்து செய்தது.

இதனைத் தொடர்ந்து, இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (ஆகஸ்ட் 18) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், “திராவிடர் கழகம் நடத்தும் இரு சக்கர வாகன பேரணியில் எத்தனை இரு சக்கர வாகனங்களில், எத்தனை பேர் பங்கேற்க உள்ளனர்? எந்த இடத்தில் இந்த பேரணி தொடங்கி எந்த இடத்தில் முடியும் என்பது உள்ளிட்ட விவரங்களை திராவிடர் கழகம் சார்பில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

அதன்படி, எந்த மாவட்டத்தின் வழியாக இந்த வாகன பேரணி நடத்தப்படும் என்பது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவீந்திரன் நேற்று விரிவான மனு தாக்கல் செய்தார். மேலும், திருநெல்வேலியில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் எழுச்சி மாநாட்டிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது ஏன்? பேரணிக்கு அனுமதி வழங்கப்படுமா என காவல்துறை பதிலளிக்க நீதிபதி வி. லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 19) நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், திராவிடர் கழகத்தினர் திருநெல்வேலியில் நடத்தவுள்ள மாநாட்டிற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாகன பேரணிக்கு நாளை (ஆகஸ்ட் 20) காவல்துறை அனுமதி வழங்கும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, திராவிடர் கழகத்தினரின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.