நல்வாழ்வு நிலையங்களை நாடும் இளம் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நீடித்த ஆயுள் தொடர்பான நல்வாழ்வுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையங்களையும் மருந்தகங்களையும் நாடும் இளம் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாள் கண்டறிந்துள்ளது.
குறிப்பாக, தசை மீட்சி மற்றும் அறிவு சார்ந்த நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க விரும்பும் இளம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நீடித்த ஆயுள் மற்றும் நல்வாழ்வுக்கான நிலையங்கள் அந்த செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளில் அதுபோன்ற எட்டு நிலையங்கள் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்றான ‘ஹவுஸ் லாஞ்சிவிட்டி’யை 36 வயது சியூ ஜி வே தமது மனைவி ஸ்டெஃபனி ஓங்குடன் இணைந்து நடத்துகிறார்.
பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிறகு அந்த நிலையத்தைத் தொடங்கியதாக திரு சியூ தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த சிங்கப்பூர் பயிற்சி பெற்ற மருத்துவருமான திரு சியூ, நல்வாழ்வு சிகிச்சைகள் மூலம் உளவியல் ரீதியான மீட்சியின் முக்கியத்துவத்தைக் கண்டறிந்ததாகக் கூறினார்.
இளையர்கள் தங்கள் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, அதற்காக நேரத்தையும் பணத்தையும் செலவிட முன்வரும் போக்கு அதிகரித்து வருகிறது என்றார் அந்த நிலையத்தின் மேலாளரான லூகஸ் கோக்.
தமது நிலையத்தின் 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் 30களின் தொடக்கத்தில் உள்ளவர்கள் என்றும் அவர் கூறினார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இந்த சிகிச்சைகள் நீண்ட ஆயுளுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்று கேட்டபோது, “மோசமான தூக்கப் பழக்கம், மனப் பதற்றம் போன்ற பிரச்சினைகளின் மூல காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று திரு சியூ தெரிவித்தார்.
சிகிச்சை நாடியோரில் ஒருவரான 24 வயது கேரிசன் லிம், வெப்பக் குளியல் (சோனா), குளிர்ந்த நீர் குளியல், சிவப்பு ஒளி சிகிச்சை போன்றவற்றுக்காக இரு வாரங்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் செலவிடுவதாகக் கூறினார்.
நீண்ட ஆயுளை ஊக்குவிக்கும் வழிகளாகச் சந்தைப்படுத்தப்படும் இந்த சிகிச்சைகள், தமது உடல் மற்றும் மனநல மீட்சியை விரைவுபடுத்தவும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கவும் உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.