பா.ஜ.,வுடன் நெருங்கி செல்லவே ராகுல் மீது விஷம் கக்கும் தி.மு.க., : காங்.,
பா.ஜ.,வுடன் நெருங்குவதற்காகவே ராகுல் மீது, தி.மு.க., நாளிதழ் விஷத்தை கக்குவதாக, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மக்கள் ஏன் தி.மு.க.,வை நிராகரித்தனர் என்பதை ஆராயாமல், ராகுலையும் காங்கிரசையும் தாக்குவது, தோல்வியை மறைக்கும் முயற்சி. பல தேர்தல் தோல்விகளை, தி.மு.க., கண்டுள்ளது. அப்போதெல்லாம் கருணாநிதி இருந்தார்; தோல்வியை அரசியல் முதிர்ச்சி, சாதுர்யத்துடன் ஏற்று, மீண்டு வந்தார்.
உதயநிதி தலைமையிலான இன்றைய தி.மு.க.,வால், ஒரு தோல்வியை கூட அரசியல் நாகரிகத்துடன் எதிர்கொள்ள முடியவில்லை. அதனால், கூட்டணி கட்சிகள் மீது, குறிப்பாக காங்கிரஸ் மீது, தி.மு.க., நாளிதழ் விஷ வார்த்தைகளை கக்கி வருகிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது, காங்கிரஸ் எதிர்ப்பை பா.ஜ.,விடம் நிரூபித்து, அவர்களுடன் ஒட்டியும் உறவாடியும் செல்லும் முயற்சியின் கூக்குரலாகவே தெரிகிறது.
தி.மு.க., அரசின் ஊழல், 36 சதவீத கமிஷன் அரசியல், குடும்ப ஆதிக்கம், நிர்வாக தோல்வி மற்றும் அகந்தைக்கு எதிராகவே தமிழக மக்கள் ஓட்டளித்தனர். கடந்த ஐந்தாண்டுகளில் நடந்தது வளர்ச்சி அரசியல் அல்ல; 'கமிஷன் மாடல்' ஆட்சி.
உதயநிதியின் அரசியல் தோல்வி, நிர்வாக முதிர்ச்சியின்மை, மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிய நிலை போன்றவை, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. அதற்கான தண்டனையை தான், தேர்தலில் மக்கள் வழங்கியுள்ளனர்.
அதிகாரத்திற்காக அரசியல் செய்பவர் அல்ல ராகுல்; பதவிக்காக கொள்கையை விற்கும் தலைவர் அல்ல. ராகுலின் அரசியல் நேர்மை, தியாகம், அறிவை பற்றி பேசுவதற்கு, முதலில் அதற்கான தகுதியும், அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.
தினமும் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, வெளியில் ஒரு பேச்சும், உள்ளே ஒரு பேரமும் நடத்துபவர்களுக்கு, அவரது மதியைப் பற்றி பேச, எந்த அருகதையும் இல்லை.
மக்களின் தீர்ப்பை மதித்து, சுயபரிசோதனை செய்வதற்கு பதிலாக, மற்றவர்களை குறை கூறிக்கொண்டே இருந்தால், தி.மு.க.,வின் வீழ்ச்சி மேலும் வேகமாகும்.
ஊழல், கமிஷன், இரட்டை வேடம் மற்றும் அதிகார அகந்தைக்கு, தமிழகத்தில் இனி இடமில்லை என்பதை மக்கள் தெளிவாக சொல்லி விட்டனர்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.