📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 04, 2026 09:04 AM

பைனலில் வைபவ் சூர்யவன்ஷி ஆடணுமா இல்லையான்னு சொல்லப் போவதே கம்பீர்தான்.. துலீப் டிராபி சிக்கல்

பைனலில் வைபவ் சூர்யவன்ஷி ஆடணுமா இல்லையான்னு சொல்லப் போவதே கம்பீர்தான்.. துலீப் டிராபி சிக்கல்

பைனலில் வைபவ் சூர்யவன்ஷி ஆடணுமா இல்லையான்னு சொல்லப் போவதே கம்பீர்தான்.. துலீப் டிராபி சிக்கல்

மும்பை: 2026 துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா விளையாடுவார்களா என்பதை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் தீர்மானிக்க உள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 6 முதல் 10 வரை நடக்கும் இறுதிப் போட்டியில் தெற்கு மற்றும் கிழக்கு மண்டல அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி முடிந்த 5 நாட்களில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச டி20 தொடர் துவங்குகிறது. இதற்காக இந்திய டி20 அணி வீரர்கள் செப்டம்பர் 9 அல்லது 10ம் தேதிகளில் டெல்லியில் பயிற்சி முகாமில் இணைய வேண்டும். ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் கிழக்கு மண்டல கேப்டன் இஷான் கிஷன், துணை கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் தெற்கு மண்டல கேப்டன் திலக் வர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதனால் இவர்கள் துலீப் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

தேசிய அணியின் அட்டவணைப்படி வீரர்கள் டெல்லி வர வேண்டும் என தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உத்தரவிட்டால், இவர்கள் இறுதிப் போட்டியில் ஆட முடியாது. மாறாக, இறுதி ஆட்டத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 10 இரவு டெல்லி வர கம்பீர் அனுமதித்தால் மட்டுமே இவர்கள் களமிறங்க முடியும். போட்டி சென்னையில் நடப்பதால், ஆட்டம் முடிந்த சில மணி நேரங்களில் இவர்கள் டெல்லிக்கு விமானத்தில் பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பின் கிழக்கு மண்டல அணி துலீப் டிராபி கோப்பையை வெல்லும் வாய்ப்புடன் உள்ளது. அந்த அணியில் இஷான் கிஷன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி மிக முக்கிய வீரர்களாக உள்ளனர். அரையிறுதியில் வைபவ் 107.69 ஸ்டிரைக் ரேட்டுடன் 92 ரன்கள் குவித்து கலக்கினார். தெற்கு மண்டல கேப்டன் திலக் வர்மா 167 ரன்கள் குவித்து அபார ஃபார்மில் உள்ளார்.

இவர்கள் இருவரும் விலகினால் கிழக்கு அணியில் சுப்ரான்ஷு சேனாபதி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. மறுபுறம் தெற்கு மண்டல அணியில் கே எல் ராகுல், தேவ்தத் படிக்கல் மற்றும் முகது சிராஜ் என மூன்று டெஸ்ட் அணி வீரர்கள் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் இறுதிப் போட்டியை நேரில் பார்வையிட சென்னை வருகிறார். கம்பீர் எடுக்கப் போகும் முடிவை பொறுத்தே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.