பெண்களை அத்துமீறி வீடியோ.. யூடியூப் காசுக்காக ஊர் மானத்தை வாங்குறான்.. ஜிபிமுத்து மீது மக்கள் புகார்
சென்னை: யூடியூபரும் நடிகருமான ஜி.பி.முத்துவுக்கும், அவரது சொந்த ஊரான பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த மக்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக இடம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த மாதம் என் வீட்டின் முன் மாந்திரீக பூஜை நடத்தினார்கள்; அதைத் தட்டிக் கேட்டதால் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் தாக்குதல் நடத்தினார்கள் என ஜி.பி.முத்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் போலி செய்திகளை பரப்பியதாக ஜி.பி.முத்து மீது ஏற்கனவே 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
பழமையான கோவில்: ஜி.பி.முத்துவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெருமாள்புரம் பகுதி மக்கள் திரண்டு வந்து ஜிபி முத்து மீது புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார்கள். எங்கள் ஊரில் 200 வருடங்கள் பழமையான கோவில் ஒன்று இருக்கிறது. அந்த கோவிலை புதுப்பிப்பதற்காக ஊரில் உள்ள 250 வரிதாரர்களும் பணம் போட்டு, திருப்பணிகள் செய்வதற்காகத் தீர்மானம் நிறைவேற்றி வேலைகளை தொடங்கி நடத்தி வருகிறோம். ஆனால் நீதிமன்றம் கோவிலை ஆக்கிரமித்துகட்டுவதாக பொய் செய்திய பரப்பினார்.
போலி செய்தி: நீதிமன்றமும் கோவில் ஏற்கனவே இருந்த அதே இடத்தில்தான் கட்டப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. நாங்களும் அதே இடத்தில்தான் கோவிலைக் கட்டி வருகிறோம். ஆனால், ஜி.பி.முத்து தன்னுடைய சொந்த யூடியூப் வருமானத்திற்காகத் தொடர்ந்து தவறான வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். கோவில் பொது இடத்தை ஆக்கிரமித்துக் கட்டுவதாகக் கூறி மக்களைக் குழப்பி, வதந்திகளைப் பரப்புகிறார். கடந்த மாதம் நாங்கள் கோவிலில் செய்த சாதாரண பூஜையை, 'மாந்திரீக பூஜை' என்று சமூக வலைத்தளங்களில் பொய் செய்தியாகப் போட்டு எங்கள் ஊரின் பெயரையே கெடுத்துவிட்டான். இதை நாங்களோ தட்டிக் கேட்டால், ஆட்களை வைத்து எங்களை அடித்துவிட்டு, நாங்களே அடித்ததாகக் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுக்கிறான்."
பெண்களை வீடியோ எடுக்கிறார்: இதுமட்டுமில்லாமல் எங்கள் வீட்டுப் பெண்களை வீடியோ எடுத்து யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடுகிறார். அடுத்த வீட்டு பெண்களை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவதற்கு இவனுக்கு யார் அனுமதி கொடுத்தது? 'கோவிலை நான் கட்டவே விடமாட்டேன், கட்டிப்பார் எனச் சவால் விடுகிறான். இவன் மீது இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யூடியூப் மூலம் காசு வருகிறது என்பதற்காக இவன் பொய்யான செய்திகளைப் பரப்புகிறான். வெளியூரில் இருக்கும் அவனது யூடியூப் ரசிகர்களும் ஊரில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அவனுக்கு ஆதரவாகக் கமெண்ட் போடுகிறார்கள். உண்மையிலேயே நடப்பது என்னவென்று நேரில் வந்து பார்த்தால்தான் தெரியும் என்று கொந்தளிப்புடன் ஊர் மக்கள் பேசி உள்ளனர்.