பிரியாணி பாத்திரத்தில் பெண் உடல் பாகம்: மணிப்பூரில் பதுங்கியிருந்த தம்பதி கைது
பிரியாணி பாத்திரத்தில் பெண் உடல் பாகம்: மணிப்பூரில் பதுங்கியிருந்த தம்பதி கைது
கொலைக்கான காரணம் என்ன? ஹைத்துல் நிஷாவிற்கும் இவர்களுக்கும் இடையே என்ன தொடர்பு? கொலை எப்போது நடந்தது? என்பது குறித்த விவரங்கள் அடுத்தடுத்த விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published : August 29, 2026 at 3:33 PM IST
சென்னை: கூடுவாஞ்சேரியில் பெண் கொலை செய்யப்பட்டு, பாதி உடற்பாகங்களை ஆக்ரா ரயிலிலும், மீதி பாகங்களை பிரியாணி பாத்திரத்தில் போட்டும் வைத்து விட்டு தலைமறைவான தம்பதியை போலீசார் மணிப்பூரில் கைது செய்தனர்.
சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கிச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 5 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா ரயில் நிலையம் சென்ற போது, பொதுப்பெட்டியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் சிவப்பு நிற சூட்கேஸ் கிடப்பதாகவும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த பெட்டியை போலீசார் திறந்து பார்த்த போது, அதில் அடையாளம் தெரியாத நிலையில் மனித உடற்பாகங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஆக்ரா போலீசாரும், ரயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அந்த சூட்கேஸிற்குள் இருந்த பெண்ணின் உடற்பாகங்கள் சுற்றப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர், சென்னையைச் சேர்ந்த ஒரு ஜவுளிக்கடைக்கு சொந்தமானது என தெரிந்ததும் வழக்கின் விசாரணை சென்னையை நோக்கி திரும்பியது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமரா காட்சிகளை ரயில்வே போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும் பெண்ணும் அந்த சூட்கேஸை கொண்டு வந்த காட்சிகள் போலீஸாருக்கு கிடைத்தன. அந்த ஜோடி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்று, சூட்கேஸை ரயிலில் வைத்து விட்டு, பின்னர் பூங்கா ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து ரயிலில் ஏறியதும், பின்னர் கூடுவாஞ்சேரி வரை சென்றதும் சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணை மூலம் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சுமார் 350-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், பொதுமக்கள் அளித்த தகவல்களும் விசாரணைக்கு உதவியாக இருந்தன.
இதன் அடிப்படையில் கூடுவாஞ்சேரியில் அந்த நபர்கள் தங்கியிருந்த வீடு போலீஸாரால் அடையாளம் காணப்பட்டது. அந்த வீட்டுக்கு போலீஸார் சென்ற போது வீடு பூட்டப்பட்டிருந்ததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டுக்குள் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததும், உடல் பாகங்கள் வீட்டிலிருந்த பிரியாணி அண்டாவில் காய்கறிகள், மைதா மாவுடன் கலந்து வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இருப்பினும் அப்போது அந்த நபரின் தலைப்பகுதி கிடைக்கவில்லை. இதையடுத்து உடற்பாகங்களை மட்டும் போலீஸார் மீட்டு தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் ஹைத்துல் நிஷா என்பது தெரிய வந்தது. இவர் தாம்பரம் அருகேயுள்ள பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததும், அவருடன் மாணிக் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜி ஆகியோர் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலைக்கு தகாத உறவு அல்லது பணப் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கினர்.
இதனிடையே ஹைத்துல் நிஷா காணாமல் போனதாக அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அவரது உடற்பாகங்கள் கண்டறியப்பட்டதையடுத்து, அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இந்த வழக்கை கூடுவாஞ்சேரி போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், சென்னையிலுள்ள ஒரு வீட்டிலிருந்து ஹைத்துல் நிஷாவின் தலை கண்டறியப்பட்டதாக ஆக்ராவைச் சேர்ந்த காவலர் ராஜேஷ் தீட்சித் தெரிவித்திருந்தார். இருப்பினும், இதுகுறித்த தகவல் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், போலீசாரின் தொடர் விசாரணையில் ஹைத்துல் நிஷாவுடன் தங்கியிருந்த மாணிக் லஸ்கர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடைய மனைவி பகவதி மாஜி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், சூட்கேஸில் வைத்து உடற்பாகங்களை அனுப்பி விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பிய அந்த ஜோடி, அங்கிருந்து சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
அவர்கள் இருவரும் கணவன் - மனைவி என விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, அவர்கள் வட மாநில பகுதிகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அங்கு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இதனையடுத்து, இக்கொலையில் முக்கிய குற்றவாளியான மாணிக் லஸ்கர் (வயது 22) என்பவரை மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டம் காஷிம்பூரில் கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மாணிக்கிடம் நடத்திய விசாரணையில், அவர் அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம், தட்சிண் கிருஷ்ணபூர், சோனாபரிகாட் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த அவருடைய மனைவி பகமதியை போலீசார் தொடர்ந்து தேடிய நிலையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரையும் சென்னை அழைத்து வந்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் என்ன? ஹைத்துல் நிஷாவிற்கும் இவர்களுக்கும் இடையே என்ன தொடர்பு? கொலை எப்போது நடந்தது? என்பது குறித்த விவரங்கள் அப்போது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.