📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 29, 2026 04:04 PM

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கு தள்ளுபடி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கு தள்ளுபடி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கு தள்ளுபடி

அனைத்து துறைகளும் இணைந்து மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டத்தக்கது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்தது.

Published : August 28, 2026 at 5:31 PM IST

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காரைக்குடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யக்கோரி பொது நல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "செப்டம்பர் 6 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விரிவான கூட்ட நெரிசல் மேலாண்மை, பொதுமக்கள் பாதுகாப்பு, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து, அவசரகால நடவடிக்கைகள் உள்ளிட்ட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் முன் கூட்டியே மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

மேலும், மருத்துவ மற்றும் அவசரகால வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேவையான போக்குவரத்து ஒழுங்கு முறை போன்றவற்றை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளில் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உரிய பணி சுழற்சி முறையையும் ஏற்படுத்தி தரவும் உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக இன்று (ஆகஸ்ட் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ள மணிகண்டன், கோயில் விழாக்கள் தொடர்பாக தொடர்ச்சியாக இது போன்ற மனுக்களை தாக்கல் செய்து வருகிறார். தமிழ்நாடு அரசு, கோவில் நிர்வாகம் மற்றும் அனைத்து துறையினரும் இணைந்து மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை முறையாக நடத்த உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "தமிழ்நாடு அரசு, காவல் துறை, சுகாதாரத் துறை, உணவு பாதுகாப்புத் துறை, தீயணைப்புத் துறை, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கொண்டு ஏதேனும் சிறப்பு நடவடிக்கைகள் தேவைப்பட்டாலும் அவை விரைவாக செய்யப்படும்.

மேலும், தமிழ்நாடு அரசின் அனைத்து தூறைகளும் இணைந்து மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டத்தக்கது” என்று குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.