தோனியால் ஸ்தம்பித்த சிஎஸ்கே நிர்வாகம்.. முக்கிய முடிவு எடுக்கும்வரை அனைத்து பணிகளும் நிறுத்தம்
தோனியால் ஸ்தம்பித்த சிஎஸ்கே நிர்வாகம்.. முக்கிய முடிவு எடுக்கும்வரை அனைத்து பணிகளும் நிறுத்தம்
சென்னை: தோனி ஒரு முடிவை எடுக்காததால் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 ஐபிஎல் சீசன் சென்னை அணிக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தையே பிடித்தது. காயம் காரணமாக தோனி தனது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக கடந்த சீசன் முழுவதும் ஆடவில்லை.
மேலும், சிஎஸ்கே அணியின் நீண்ட கால பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் 19 ஆண்டுகால பயணத்திற்கு பிறகு அணியில் இருந்து விலகியுள்ளார். பிளெமிங் கடந்த 2008ல் வீரராக இணைந்து, 2009 முதல் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு 5 முறை சிஎஸ்கே அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று தந்தார். இதனால் புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் கட்டாயத்தில் சிஎஸ்கே நிர்வாகம் உள்ளது.
இந்த நிலையில், அணியின் அடுத்த கட்ட நகர்வுகளை செய்யும் முன் தோனியின் முடிவுக்காக சிஎஸ்கே நிர்வாகம் காத்திருக்கிறது. அவர் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் ஆகிய இரண்டு பொறுப்புகளில் ஏதேனும் ஒன்றை ஏற்பார் என்று கூறப்படுகிறது. ஆனால், அந்த இரண்டில் எதை தேர்வு செய்யப் போகிறார் என தோனி இன்னும் முடிவு எடுக்கவில்லை. அவர் முடிவெடுத்த பிறகே ஏலத்திற்கான திட்டங்கள் மற்றும் புதிய வீரர்கள் தேர்வு போன்ற பணிகள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் 2027 ஐபிஎல் தொடரில் தோனி ஒரு வீரராக களம் இறங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே தெரிகிறது. முன்னதாக, 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக தோனி 4 கோடி ரூபாய்க்கு அன்கேப்டு வீரராக தக்கவைக்கப்பட்டிருந்தார். சிஎஸ்கே அணி தொடர்ந்து 2024 முதல் 2026 வரை 3 ஆண்டுகளாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில், தோனியின் புதிய வழிகாட்டுதலுடன் அணியை மீண்டும் வலிமையாக கட்டமைக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.