போக்குவரத்துக்கு மூடப்படும் ஜூ சியாட்டின் ஒரு பகுதி
ஜூ சியாட் வட்டாரத்தின் ஒரு பகுதி அக்டோபர் 3ஆம் தேதி போக்குவரத்துக்கு மூடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
உலக கார்கள் அற்ற நாளை அனுசரிக்கும் வகையில் அன்று பிற்பகல் 3.30 மணியிலிருந்து இரவு 9.30 மணிவரை ஜூ சியாட்டில் உள்ள மரபுடைமைப் பகுதியில் வாகனங்கள் அற்ற பகுதியாக மாறும்.
டன்மன் சாலைக்கும் ஈஸ்ட் கோஸ்ட் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி, உலக கார்கள் அற்ற நாளில் மூடப்படும் என்று புதன்கிழமை (செப்டம்பர் 2) ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
மூடப்படும் மரபுடைமை பகுதியில் பல்வேறு காட்சிகளும் நடவடிக்கைகளும் நடத்தப்படும்.
உலக கார்கள் அற்ற நாளை முன்னிட்டு மத்திய வர்த்தக வட்டாரத்திற்கு வெளியில் உள்ள ஒரு பகுதி போக்குவரத்துக்கு மூடப்படுவது இதுவே முதன்முறை.
அனைத்துலக மக்கள் இன்னும் நீடித்த நிலைத்தன்மையுள்ள வழிகளில் பயணம் செய்வதை ஊக்குவிக்க ஒவ்வோர் ஆண்டும் கார்கள் அற்ற நாள் அனுசரிக்கப்படுகிறது.
உலக கார்கள் அற்ற நாள் இம்மாதம் 22ஆம் தேதி கொண்டாடப்படும் வேளையில், செப்டம்பரில் தொடங்கி நவம்பர் வரை பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்ய அரசாங்க அமைப்புகள், சமூக அமைப்புகள், நிறுவனப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
ஜூ சியாட் சாலையின் ஒரு பகுதியை அக்டோபர் மாதத்தில் மூடுவதோடு மட்டுமல்லாமல் அதிக மக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் புதிய சவாலைத் தொடங்க சுகாதார மேம்பாட்டு வாரியத்துடனும் ஆணையம் இணைந்து செயல்படுகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதிவரை, ‘ஹெல்தி 365’ செயலி மூலம் தொடர்ந்து நான்கு நாள்களுக்குக் குறைந்தபட்சம் 10,000 அடிகளைப் பதிவுசெய்வோருக்கு உலக கார்கள் அற்ற நாளிற்கான சிறப்பு அடையாள சின்னம் வழங்கப்படும்.
கவ்டெக் அமைப்புடன் இணைந்து கைப்பேசி விளையாட்டு ஒன்றையும் தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்ட நிலப் போக்குவரத்து ஆணையம், ‘கிரௌட்டாஸ்க்எஸ்ஜி’ (CrowdTaskSG) தளம் அந்த விளையாட்டைப் பார்வையிடலாம்.
இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து நவம்பர் 30ஆம் தேதிவரை தளத்தில் இருக்கும் விளையாட்டு பங்கேற்பாளர்களை நடக்கவும் சைக்கிளையும் பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்தவும் ஊக்குவிக்கிறது.